உளுந்தூர்பேட்டை நகராட்சி உரக்கிடங்கில் காய்கறி இயந்திரத்தில் சிக்கி ஊழியரின் கை துண்டானது

உளுந்தூர்பேட்டை, ஜூன் 3: உளுந்தூர்பேட்டை நகராட்சி உரக்கிடங்கில் இயற்கை உரம் தயாரித்தபோது காய்கறி இயந்திரத்தில் சிக்கி ஊழியரின் கை துண்டானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி திருவெண்ணெய் நல்லூர் சாலையில் உரக்கிடங்கு உள்ளது. இந்த உரக்கிடங்கில் உளுந்தூர்பேட்டை நகர வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு காய்கறி கழிவுகளைக் கொண்டு இயற்கை உரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காய்கறி கழிவுகளை இயந்திரத்தில் போடும் பணியில் நகராட்சி ஊழியர் சீனிவாசன் ஈடுபட்டிருந்தார். இயந்திரத்தில் திடீரென கழிவுகள் சிக்கி அடைப்பு ஏற்பட்டதால் அதனை எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது சீனிவாசனின் இடது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், நகராட்சி மேலாளர் சிவராமன், மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டவர்கள் படுகாயம் அடைந்த சீனிவாசனிடம் நலம் விசாரித்தனர். இதனிடையே படுகாயம் அடைந்த சீனிவாசனை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியரின் கை இயந்திரத்தில் சிக்கித் துண்டான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post உளுந்தூர்பேட்டை நகராட்சி உரக்கிடங்கில் காய்கறி இயந்திரத்தில் சிக்கி ஊழியரின் கை துண்டானது appeared first on Dinakaran.

Related Stories: