பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் ஜூன் 10ல் திருவிழா: 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது

 

புவனகிரி, மே 31: பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பின் வரும் 10ம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறவில்லை.

பின்னர் கொரோனா தொற்று முடிந்து நிலைமை சீரடைந்த பிறகு, கோயில் புனரமைப்பு பணிகள் துவங்கியது. அதனால் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெறவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையொட்டி இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 28ம் தேதி கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.

தினமும் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வருகிற 6ம் தேதி அர்ச்சுனன், திரௌபதி திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதியுலாவும், 8ம் தேதி மாடுபிடி விழாவும், 9ம் தேதி சுவாமி விதியுலாவும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 10ம் தேதி இரவு கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர். அதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பார்கள்.

10ம் தேதி இரவு கோயில் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள் விடிய, விடிய ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கோயிலை வலம் வருவார்கள். பின்னர் மறுநாள் 11ம் தேதி வாண வேடிக்கையுடன் தேர் உற்சவம் நடைபெற உள்ளது. கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி முடிந்து அரவான் களப்பலி நடைபெறும்.

பின்னர் முதல் நாள் இரவு தாலி கட்டிய திருநங்கைகள், அரவான் களப்பலிக்கு பிறகு தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல், இந்த ஆண்டு திருவிழா நடைபெற இருப்பதால் இப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் களைகட்டி உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கொத்தட்டை, சின்னகுமட்டி, அத்தியாநல்லூர் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் ஜூன் 10ல் திருவிழா: 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: