பெரம்பலூர் கலெக்டர் நேர்முக உதவியாளர் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர், மே 30: மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திடும் தாமினி (DOMINI) என்கிற செயலியை அனைவரும் தங்களது செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை வெள்ள காலத்தில், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக தற்காலிக முகாம்களை ஏற்படுத்துதல், தாசில்தார்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி கட்டடங்கள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை நேரில்சென்று பார்வையிட்டு, அவற்றின் உறுதித்தன்மை குறித்து ஆய்வசெய்து தயார் நிலையில் வைத்திருத்தல், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருமடங்கு தேவைகளை மூன்று மாதத்திற்கு இருப்பு வைத்துக் கொள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரும், மாவட்ட வழங்கல் அலுவலரும் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுறுத்தினர்.

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் உள்ள நீர்நிலைகள், பொதுப்பணித் துறையின் சார்பில் உள்ள நீர்நிலைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனே அகற்றிடவும், நீர் நிலைகளின் கரைகள் பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, பலவீனமாக இருக்கும் கரைகளை பலப்படுத்திடவும் அறிவுறுத்தினார்.

வட்டார அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையின் மாதிரி செயல் விளக்கம் (Mock Drill) நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இது தொடர்பான அறிக்கையினை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் வழியாக வருகிற ஜூன் 6ம் தேதிக்குள் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழை காலங்களில் தேவையான மீட்பு உபகரணங்களை வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பயன்படுத்திட தயார் நிலையில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். வெள்ளத் தடுப்புபணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு குச்சிகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும். மேலும் ஆறுகள், ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களின் கரைகள் உடையும் பட்சத்தில் உடன் சரிசெய்ய ஜேசிபி-ஹிட்டாச்சி (JCB / Hitachi) உள்ளிட்ட இயந்திரங்களை அதனை இயக்கும் நபருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாநில மற்றும் தேசிய நெடுஞ் சாலைகள்துறைகளின் கட்டுப் பாட்டில் உள்ள பாலங்களின் உறுதித்தன்மை குறித்தும், அதிக மழை வந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப் படும் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கயாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இயற்கை இடர்பாடு ஏற்பட்டு மின்சார கம்பிகள் அறுந்து விழும் சூழல் உருவானால் அவற்றை யாருக்கும் பாதிப்பின்றி உடனடியாக அப்புறப்படுத்தவும், தடையின்றி சூழ்நிலைக்கு ஏற்றவாறு மின்விநியோகம் செய்திடவும் மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த செயலியை அனைவரும் தங்களது செல்போன்களில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பேரிடர் காலங்களில் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிலும், 1800-425-4556 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்வம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சத்யா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கலை வாணி, முதன்மைக்கல்வி அலுவலர் முருகம்மாள், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் இளஞ்செல்வி, நகராட்சி ஆணையர் இராமர், தாட்கோ மேலாளர் கவியரசு, பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் பழனிச்செல்வன், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் கலெக்டர் நேர்முக உதவியாளர் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: