எர்ணாவூரில் சிக்கிய சக்தி வாய்ந்த வெடிகுண்டு செயலிழக்க வைத்து அழிப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று நடவடிக்கை

 

திருவொற்றியூர், மே 30: எர்ணாவூரில் வீட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டிய போது சிக்கிய முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு பத்திரமாக மீட்டு செயலிழக்க வைத்து அழிக்கப்பட்டது. எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் முஸ்தபா (50). இவரது வீட்டுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, கடந்த 21ம் தேதி தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது சுமார் 2 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட இரும்பு பூமிக்கு அடியில் இருந்தது.

பார்ப்பதற்கு வெடிகுண்டு போல் இருந்ததால், இதுபற்றி உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அது சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வெடிகுண்டு முதல் உலகப்போரின்போது 1914 செப்டம்பர் 22ம் தேதி, கேப்டன் வான் முல்லர் தலைமையில் எம்டன் கப்பலில் வந்த ஜெர்மனி வீரர்கள் சென்னையை தகர்க்க பீரங்கி மூலம் வீசப்பட்ட வெடிகுண்டு என்றும், அது வெடிக்காமல் புதைந்து கிடந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, எண்ணூர் போலீசார் மற்றும் ஆவடி காவல் ஆணையராக வெடிகுண்டு நிபுணர் பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 5 பேர், பாதுகாப்பு உடை அணிந்து வெடிகுண்டை மீட்டு, ஆய்வுக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

இதனிடையே நீதிமன்ற அனுமதி பெற்று எண்ணூர் காவல் ஆய்வாளர் சதீஷ் மேற்பார்வையில், இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பிரத்யேக குழுவினர், சடையங்குப்பம் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து செயழிக்க வைத்து அழித்தனர். இந்த சம்பவத்தால் மக்களிடையே பரபரப்பு நிலவியது.

The post எர்ணாவூரில் சிக்கிய சக்தி வாய்ந்த வெடிகுண்டு செயலிழக்க வைத்து அழிப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: