புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப், தோஹாவில் பேசுகையில், ‘ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்னை உள்ளது. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை நான் விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள். இந்தியாவின் நலன் பற்றி நீங்கள் எண்ணினால், அங்கு தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினம்’ என்றார்.
டிரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜ எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத் வெளியிட்ட பதிவில், ‘இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர் அமெரிக்க அதிபர். ஆனால் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். ட்ரம்ப் ‘ஆல்பா மேல்’ ஆக இருக்கலாம். ஆனால், நமது பிரதமர் ‘ஆல்பா மேல்’-களின் தந்தை. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என கங்கனா அதில் தெரிவித்திருந்தார்.
ம.பி பாஜ அமைச்சர் விஜய் ஷாவின் கர்னல் சோஃபியா குரேஷி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மத்தியில், கங்கணாவின் பதிவு அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டதால் பாஜ தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கங்கணா வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என ஆப்பிள் நிறுவன செயல் அதிகாரி டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த சமூக வலைதள பதிவை நீக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவை இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்’ என கங்கணா கூறியுள்ளார். இருந்தாலும் கங்கனாவின் பதிவின் ஸ்கிரீன் ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post டிரம்பை விமர்சித்த பதிவை நீக்க உத்தரவிட்ட பாஜ தலைவர் நட்டா: நடிகை கங்கனா ரணாவத் தகவல் appeared first on Dinakaran.