டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து எல்லையில் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதற்கிடையே இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி ஆகியோர், இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். அப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டது, முஸாஃபராபாத், கோட்லி உள்ளிட்ட ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது, தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்களின் வெற்றி, இந்திய ராணுவத் திறனை வெளிப்படுத்தியது குறித்து, ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்து கூறப்பட்டது. இந்திய படைகளின் வீரம், அர்ப்பணிப்பு நாட்டை பெருமை கொள்ளச் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு தெரிவித்தார்.

The post டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: