10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளை மறுநாள் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதேபோல், சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் ஏற்றும் பணி நடந்தது. அதுவும் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவு, நண்பகலில் 11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும்.

10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 3 நாட்கள் முன்னதாகவே வெளியாகிறது. 10ம் வகுப்பு தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்படுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். மேலும் அரசுத் தேர்வுத்துறை இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளை மறுநாள் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.

Related Stories: