கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய சேவைகள் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகளை கண்டறிந்து கல்வியில் ஆர்வத்தையும் பள்ளியில் மீண்டும் சேர்ந்து பயிலும் ஊக்கத்தையும் உருவாக்கிடவும், பெண் குழந்தைகளை ஆய்வு பயணங்களுக்கு அழைத்து செல்லவும், இத்திட்டத்தில் சமூக நலத்துறையுடன் பள்ளி கல்வி துறையும் இணைந்து செயல்பட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும் குழந்தை திருமணம், இளம் வயதில் கர்ப்ப நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வட்ட அளவில் கண்காணிப்புக்குழுக்கள் அமைத்திடவும், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சமூகநலத்துறை, காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து இதுவரை குழந்தை திருமணம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் குழந்தை திருமண நடவடிக்கையில் ஈடுபடும் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post கள்ளக்குறிச்சியில் கண்காணிப்பு குழு கூட்டம் குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை appeared first on Dinakaran.