* நாடு முழுவதுமிருந்து குவியும் திருநங்கைகள்
* பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கலெக்டர் ஆலோசனை
விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 12ம் தேதி திருநங்கைகளுக்கான மிஸ்கூவாகம் அழகிப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது லாட்ஜ், தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் 11.5.2025 முதல் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக 13.5.2025 அன்று இரவு சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் அன்றைய தினம் திருநங்கைகள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்விற்கு பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொள்வார்கள்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், 11.5.2025 அன்று புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் நகராட்சி திடலில் திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை அழகிப்போட்டியும், 12.5.2025 அன்று விழுப்புரம், ஆஞ்சநேயர் திருமண மண்டபத்தில் முதல் சுற்றாக காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மிஸ் கூவாகம் அழகிப்போட்டியும், விழுப்புரம் நகராட்சி திடலில், இறுதிச்சுற்றாக மாலை 6 மணி முதல் 9 மணி வரை மிஸ் கூவாகம் அழகிப்போட்டியும் நடைபெறவுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி அருகாமை மாவட்டம் என்பதால் திருநங்கைகள் பெருமளவில் விழுப்புரத்தில் தங்கி திருவிழா நிகழ்ச்சிக்கு செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.
எனவே, இதுதொடர்பாக பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை சார்பில், தேவையான மருத்துவ முகாம் மற்றும் விழுப்புரம் மாவட்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுமட்டுமல்லாமல், விழுப்புரம் மாவட்டத்தில், தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் திருநங்கைகள் தங்குவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முகுந்தன், கலால் உதவி ஆணையர் ராஜீ, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post லாட்ஜ், தங்கும் விடுதிக்கு எச்சரிக்கை விழுப்புரத்தில் 12ம் தேதி மிஸ் கூவாகம் அழகி போட்டி appeared first on Dinakaran.