ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 250 காட்பாடியில் ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா: 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னைக்கு அருகில் வளர்ந்து வரும் மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும் வேலூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக வேலூருக்கு சுற்றுலாப் பயணிகளும், சிகிச்சைக்காக நோயாளிகளும், கல்விக்காக மாணவர்களும் என்று வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் வந்து செல்கின்றனர். அந்த வகையில், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக வேலூர் திகழ்ந்தாலும் இந்த மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லை. இதனால், வேலூர் இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு உள்பட வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெருக்கிட தொழிற்பேட்டை, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்பது வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு துறைகளும் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் 2022-23க்கான பட்ஜெட்டில் வேலூர், கோவை, மதுரை, பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் விதமாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் பகுதியில் 250 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அமைச்சர்கள் துரைமுருகன், டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் கடந்த ஆண்டு இடங்களை தேர்வு செய்தனர். அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டனர்.

போக்குவரத்து, சாலை வசதிகள், தொழிற்பூங்கா அமைத்தல், நிறுவனங்களின் வருகை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடம் மற்றும் சில தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தனியாரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்க ரூ.40 கோடி நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டார். அதில், வேலூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில், சாலைகள், தெரு விளக்குகள், மழைநீர் வடிகால், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ரூ.500 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 5 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் காட்பாடியில் 250 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பட்டது.

இந்த அறிவிப்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினர் இடையே வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதால் பொருளாதார ரீதியாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிப்காட் தொழிற்பூங்கா, தமிழ்நாட்டின் ஒரு முக்கிய துறையான ஆட்டோமொபைல் துறையில் உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. துல்லிய கனரக இயந்திரங்கள் மற்றும் உலோக உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழில்களுக்கு இந்த பூங்கா ஒரு உகந்த சூழலை வழங்குகிறது. வலுவான தோல் தொழில் இருப்புடன், இந்தப் பூங்கா தோல் பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி மற்றும் ஜவுளி பதப்படுத்துதல் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பகுதியில் விவசாய உற்பத்தி குறிப்பாக பால், கரும்பு மற்றும் நெல் ஆகியவற்றிலும், உணவு பேக்கேஜிங் தொழில்களுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மின்னணு கூறு உற்பத்தி மற்றும் மின் உபகரணங்கள் உற்பத்தியிலும் ஈடுபட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது ஆம்பூர் தோல் தொழிற்சாலை, ராணிப்பேட்டை பெல் போன்றவை முக்கிய வேலைவாய்ப்பகமாக இருந்தது. தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்திற்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தை தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக காட்பாடி தாலுகா மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வேலூர் மாவட்டத்திலும் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் காட்பாடி தாலுகா மகிமண்டலம், விண்ணம்பள்ளி, முத்தரிசிகுப்பம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 250 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.

இங்கு பொறியியல், வாகன உதிரிபாகங்கள், தோல், ஜவுளி மற்றும் வேளாண் பதப்படுத்துதல் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. வேலூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்மயமாக்கலை வளர்ப்பதற்கும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த பூங்கா முக்கிய பங்கு வகிக்கும். உள்நாடு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கிறது. தளவாடங்கள், பேக்கேஜிங், சில்லரை விற்பனை மற்றும் சேவைகள் போன்ற துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும். 5 ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வருவதால் இளைஞர்கள் இனி வெளிமாநிலத்திற்கும், வெளிமாவட்டங்களுக்கு செல்ல தேவையில்லை. அவர்களுக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் இங்கேயே கிடைக்க உள்ளது. விரைவில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 250 காட்பாடியில் ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா: 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: