சத்தியமங்கலம்: கடந்த அதிமுக ஆட்சியில் லேப்-டாப் கொள்முதலில் ஊழல் நடந்ததா? என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து உள்ளார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதி அரேப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ தலைமை தாங்கி பேசியதாவது: முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது. கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு வழங்கிய லேப்-டாப் திட்டத்தில் லேப்-டாப் கொள்முதல் செய்ததில் எனக்கு எந்த பங்கும் இல்லை.
லேப்-டாப் கொள்முதல் செய்தது ஐடி துறை மந்திரி. சைக்கிள் வாங்கியது ஒரு மந்திரி. துணி வாங்கியது ஒரு மந்திரி. தைத்துக்கொடுத்தது ஒரு மந்திரி. கட்டிடம் கட்டியது ஒரு மந்திரி. இதையெல்லாம் வாங்கி மாணவர்களுக்கு தந்தது மட்டுமே என் வேலை. பாஜவோடு கூட்டணி வைத்துள்ளோம். என்னை பொறுத்தவரை நான் தொண்டனாகவே இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றுகிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
The post அதிமுக ஆட்சியில் லேப்டாப் கொள்முதலில் ஊழலா?: செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.