தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை நியமித்தது ஒன்றிய அரசு

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை ஒன்றிய அரசு நியமித்தது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த கோழைத்தனமான தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளும் அவர்களை ஆட்டுவிப்பவர்களும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்றும், கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம், குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாதுகாப்பு படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அலோக் ஜோஷி; ஆலோசனை குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

The post தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை நியமித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: