30+ ல் ஏற்படும் முகச் சுருக்கம் தவிர்க்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பெரும்பாலும், ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி பலருக்கும் 30 வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை இறுக்கமாகவும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். காரணம், வயது அதிகரிக்கும்போது கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடுகிறது. அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

ஒருசில முகப் பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். அவற்றை தெரிந்து கொள்வோம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

பயிற்சி: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும். மல்லாந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டுத் துணியிலான தலையணை சிறந்தது.

சுருக்கங்களைத் தடுக்கும் உணவுகள்

*வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுப் பொருட்கள்.

*கறுப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள்.

*குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள்.

*ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

*முந்தைய நாள் உணவு மீந்து விட்டது அதனை தினசரி உண்ணும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. இதுவும் 30 வயதுக்கு மேல் முகச் சுருக்கம் வர ஒரு காரணமாகும். எனவே, கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணும் பழக்கத்தை கடைபிடியுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தைப் பேணுங்கள்.

சருமத்திற்கான மசாஜ்

*தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்துவரலாம்.

*கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம்.

*முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும்.

*வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம்.

*வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி ‘பேஸ் பேக்’காக பயன் படுத்தலாம்.

*காய்ச்சாத பாலில் பருத்திப் பஞ்சை நனைத்து சருமத்தில் பூசி வரலாம்.

சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்

சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சருமம் எண்ணெய்ப் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். அதுவும் அவரவர் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகிப்பது மிகவும் நல்லது.

சிலர் கோபத்தில் அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களைக் கடிப்பது போன்றவற்றை செய்வார்கள். இதுவும் முகச்சுருக்கம் விரைவில் ஏற்பட ஒரு காரணமாகும். எனவே, அந்தப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெளி உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றை கொண்டிருக்கும் ஆண்கள் பலருக்கும் 30 வயதை நெருங்கும் முன்பே முகத்தில் சுருக்கம் விழ தொடங்கிவிடுகிறது. எனவே, அவற்றை தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: தவநிதி

The post 30+ ல் ஏற்படும் முகச் சுருக்கம் தவிர்க்கும் வழிகள்! appeared first on Dinakaran.

Related Stories: