இம்முறை எந்த தவறும் நடக்காது நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஒன்றிய கல்வி அமைச்சகம் உறுதி

புதுடெல்லி:இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 4ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட நகரங்களில், 5000 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.
இந்நிலையில், இம்முறை எந்த முறைகேடும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வை சுமூகமாக, நியாயமாக மற்றும் பாதுகாப்பாக நடத்துவதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலெக்டர்கள் மற்றும் எஸ்பிகளுடன் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு மையங்களில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடுதலாக மாவட்ட காவல்துறையினரால் பல அடுக்கு சோதனைகள் இருக்கும். வினாத்தாள், விடைத்தாள்கள் முழு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். தேர்வு சமயத்தில் பயிற்சி மையங்கள், டிஜிட்டல் தளங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர்கள், எஸ்பிக்கள் நேரில் ஆய்வு செய்வார்கள் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

The post இம்முறை எந்த தவறும் நடக்காது நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஒன்றிய கல்வி அமைச்சகம் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: