நன்றி குங்குமம் டாக்டர்
மலையாள திரையுலகப் பிரபலங்களில் ஒருவர் பிரித்விராஜ். இவருக்கு தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற வேறு சில முகங்களும் உள்ளன.
இவர் 2002ம் ஆண்டு ‘நந்தனம்‘ என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அவரது தந்தை மற்றும் தாய் இருவருமே மலையாள திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான்.2005ம் ஆண்டு ‘கனா கண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் ‘பாரிஜாதம்’, ‘மொழி’, ‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘அபியும் நானும்’, ‘வெள்ளித்திரை’, ‘நினைத்தாலே இனிக்கும்’, 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’, அதன்பின்னர், வசந்தபாலன் இயக்கத்தில் காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரித்விராஜின் ஃபிட்னெஸ் ரகசியங்களைத் தெரிந்துகொள்வோம்.
வொர்க் அவுட்ஸ்: நான் ஒரு ஃபிட்னெஸ் விரும்பி. எனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பேன். எனவே, உடலமைப்பைப் பராமரிக்க கடுமையான உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்கிறேன். அது கார்டியோ, வலிமை பயிற்சி மற்றும் செயல்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றின் கலவையாக இருக்கும். உடலை வருத்திக் கொண்டு இவ்வளவு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா என்றால் நாம் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால், இதையெல்லாம் நாம் செய்துதான் ஆக வேண்டும். வலியில்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது அல்லவா.
தொடர்ந்து ரசிகர்களின் மனதில் நமக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான உழைப்பை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும். நடிகன் என்று இல்லை. பொதுவாகவே எனக்கு ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். அதனால் எனக்காக நான் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன்.
அந்தவகையில், 30 நிமிட கார்டியோ அமர்வுடன் எனது வொர்க்அவுட்டைத் தொடங்குகிறேன். இது எனது இதயத் துடிப்பை அதிகரிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இது தவிர, டிரெட்மில்லில் ஓடுவது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகளையும் செய்து வருகிறேன். கார்டியோவுக்குப் பிறகு, வலிமைப் பயிற்சியில் கவனம் செலுத்துவேன். அவை தசையை வளர்க்கவும் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனுடன் குந்துகைகள், டெட்லிஃப்ட்ஸ், பெஞ்ச் பிரஸ் மற்றும் புல்-அப்கள் போன்ற கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன்.
அடுத்ததாக செயல்பாட்டுப் பயிற்சிகள். இது எனது சுறுசுறுப்பு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பர்பீஸ், பாக்ஸ் ஜம்ப்ஸ் மற்றும் போர்க் கயிறுகள் போன்ற பயிற்சிகளையும் செய்கிறேன்.இதைத் தவிர, விளையாட்டுகளிலும் எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரி நாட்களில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். பொதுவாக, நடிகர்கள்தான் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அனைவருமே தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏனென்றால், ஃபிட்னெஸ் என்பது நமது தன்னம்பிக்கையை அதிகமாக்கும் விஷயமாகும். நான் எனது உடற்பயிற்சிகளை முடித்தவுடன் அரைமணி நேரம் எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன். அந்த அரைமணி நேரமும் அமைதியாக அமர்ந்திருப்பேன். பின்னர், உடலை குளிர்விக்கவும், நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் தண்ணீர் அதிகமாக அருந்துவேன். அதன்பின்னரே, அடுத்த வேலையைத் தொடங்குவேன்.
உணவுத் திட்டம்
ஃபிட்னெஸில் எவ்வளவு கவனம் செலுத்துகிறேனோ அந்தளவு உணவு முறையையும் பின்பற்றி வருகிறேன். அந்த வகையில் எனது உடலுக்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், எனது உடலமைப்பைப் பராமரிக்கவும் கடுமையான உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறேன். பொதுவாக, ஒரு படத்திற்கு கமிட் ஆகும்போது, அந்த கதாபாத்திரத்துக்கு என்ன மாதிரியான உடல் அமைப்பு தேவையோ அதற்கு ஏற்றவாறு என் உடல் எடையை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்கிறேன். இதற்கு எனக்கு உதவுவது உணவு கட்டுப்பாடுதான். பொதுவாக, உடல் எடையை கூட்ட வேண்டும் என்றால், கண்ட உணவுகளையும் சாப்பிட்டு ஏற்றமாட்டேன்.
முறையான டயட் சார்ட்டை பின்பற்றியே உடல் எடையை அதிகரிப்பேன். அதேபோல் குறைக்க வேண்டும் என்றாலும் முறையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவேன். இதற்காக, புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உள்ளடக்கிய சீரான உணவை உண்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். மேலும், இலை காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வேன். அதுபோன்று, இரவில் எளிமையான உணவையே எடுத்துக்கொள்வேன்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post பிரித்விராஜ் ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்! appeared first on Dinakaran.