தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என ஆளுநர் ரவி வற்புறுத்திய நிலையில் ‘தமிழ் நாடு’ பெயர் எழுதிய சட்டையுடன் நடிகர் நானி: சென்னை பட விழாவில் பரபரப்பு

சென்னை: நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில், சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.

தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நானி அணிந்து வந்த சட்டை மீதுதான் அனைவரது பார்வையும் பட்டது. காரணம், அந்த சட்டையில் லவ் ஃபிரம் தமிழ்நாடு என்று வாசகம் இருந்தது.

இதில் தமிழ் நாடு என்ற பெயர் மட்டும் பெரிய எழுத்துகளில் இடம்பெற்றிருந்தது. ‘தமிழக அரசியலில் ஒன்றிய அரசின் குரலாக ஆளுநர் ரவி பேசி வரும் பல்வேறு விஷயங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதுபோல் அவர், தமிழ்நாட்டை தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு என்றே தனது சட்டையில் பெயர் போட்டு வந்து தமிழ்நாடு மீதான அன்பை நானி வெளிப்படுத்தியது ரசிகர்களை பரவசமடைய செய்திருக்கிறது’ என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

விழாவில் நடிகர் நானி பேசுகையில், ‘‘நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன். பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என சொல்லி இருக்கிறேன். 2012 – 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு, தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.

 

The post தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என ஆளுநர் ரவி வற்புறுத்திய நிலையில் ‘தமிழ் நாடு’ பெயர் எழுதிய சட்டையுடன் நடிகர் நானி: சென்னை பட விழாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: