சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆர்.கே.நகர் எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர் என்கிற ஜான் எபினேசர் (திமுக) பேசுகையில், “என்னுடைய ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் துர்காதேவி நகர் ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மாறிவரும் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக, மின் பற்றாக்குறை என்பது வெகுவாக நிலவுகிற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதிகளில் துணை மின் நிலையங்களை அமைக்க அமைச்சரிடம் கடிதம் வழங்க இருக்கிறேன். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வண்ணம், அப்பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுமா?” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், “தமிழ்நாடு மின்சாரத் துறையினுடைய வரலாற்றில், இந்த நான்காண்டுகளில், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிக பணிகளைச் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுகுறித்து உறுப்பினருக்கும் நன்றாக தெரியும். நானே அந்த பகுதிகளுக்கு நேரில் சென்றபோது, சட்டமன்ற உறுப்பினரையும் உடன் அழைத்துச் சென்றேன். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழுவதுமாக பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. உறுப்பினர் சுட்டிக்காட்டியிருக்கிற துணை மின் நிலையம் அரசினுடைய பரிசீலனையில் உள்ளது” என்றார்.
The post கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டையில் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும்: சட்டசபையில் ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் கோரிக்கை appeared first on Dinakaran.