பேராவூரணி அருகே கற்றல் களப்பயணத்தில் நிலக்கடலை அறுவடை பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்

பேராவூரணி : பேராவூரணி அருகே கற்றல் களப்பணத்தில் நிலக்கடலை பயிர்கள் அறுவடை பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு இளங்கலை வேளாண் அறிவியல் மாணவிகள் கிராம பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் தங்கி வயலில் நிலக்கடலை அறுவடை செய்தனர்.

மாணவிகள் விவசாயிகளுடன் இணைந்து, கடலை சாகுபடி வயலில் கடலை செடிகளை எவ்வாறு அறுவடை செய்வது என்றும், கடலை செடி முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள, முதிர்ந்த இலைகள் காய்ந்து, மஞ்சள் நிறமாகி கருப்பு நிற புள்ளிகள் தென்படும் செடிகளை பிடுங்கி பார்த்தால் அதில் உள்ள கடலைப் பருப்புகள் முற்றியும், அவற்றின் ஓடுகள் கருப்பு நிற கோடுகளுடனும் காணப்படும். அந்த சமயத்தில் தண்ணீர் பாய்ச்சி கடலை செடியை அறுவடை செய்ய வேண்டும் என்பதை முதிர்ந்த விவசாயிகள் மூலம் அறி ந்து கொண்டனர்.

நிலக்கடலை சாகுபடியில் வரும் பூச்சித்தாக்கம், சிவப்பு கம்பளிப் புழு, பச்சைப் புழு, அசுவினி குறித்தும், இலை புள்ளி நோய், தண்டு அழுகல், வேர் அழுகல் குறித்தும் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு கூறி அவற்றை கட்டுப்படுத்தும் இயற்கை மேலாண்மை முறைகளை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் திருமால் கண்ணன், வினோதா மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தாரகை , பேராசிரியர் லேகா பிரியங்கா ஆகியோர் மாணவிகளுக்கு வழிகாட்டினர்.

The post பேராவூரணி அருகே கற்றல் களப்பயணத்தில் நிலக்கடலை அறுவடை பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள் appeared first on Dinakaran.

Related Stories: