காஷ்மீர் தாக்குதல்.. இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்; இனி இது நடக்காதபடி அடக்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து கண்டனம்!!

சென்னை: ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தீவிரவாத தாக்குதலுக்கு தனது கண்டனத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது;

காஷ்மீர்ப் படுகொலையைக்
கனத்த வார்த்தைகளால்
கண்டிக்கிறேன்

காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில்
உறைய வேண்டியவை
பனிக்கட்டிகள்தாம்;
இரத்தக் கட்டிகள் அல்ல

தீவிரவாதம் என்பது
கோழைகளின் போர்முறையாகும்;
பூக்களின்மீது தொடுக்கப்படும்
வன்முறையாகும்

புலிகளின்மீது சினம்கொண்டு
கிளிகளைக் கொல்வது
நியாயத்தைக் காயப்படுத்தாதா?

எந்தவொரு கோரிக்கையும்
உடல்களின்மீது
இரத்தத்தால் எழுதப்படுவதல்ல

இந்திய அரசின் துப்பாக்கிகள்
தூக்கம் கலையவேண்டும்

இனி இது
நடக்காதபடி
அடக்க வேண்டும்

28 இருதயங்கள்
தங்கள் துடிப்பை
நிறுத்திய இடத்தில்
துடிக்கின்றன
இந்தியாவின் இருதயங்கள்

ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காஷ்மீர் தாக்குதல்.. இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்; இனி இது நடக்காதபடி அடக்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து கண்டனம்!! appeared first on Dinakaran.

Related Stories: