கோத்தகிரி, ஏப்.22: கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோயில் வருடாந்திர உற்சவ திருவிழா நடைபெற்று வரும் நிலையில் திருக்கல்யாணம் விழா நடைபெற்றது. கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோயிலில் வருடாந்திர உற்சவ திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பால்குட ஊர்வலம், அபிஷேக மலர் அலங்கார வழிபாடு, அக்னி கம்பம் பூச்சாட்டுதல் நடைபெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மாரியம்மன் அழைப்பு குன்னூர் ரோட்டில் அமைந்திருக்கும் கன்னி மாரியம்மன் கோயிலில் இருந்து நடைபெற்றது. தொடர்ந்து நேற்று கோத்தகிரி வட்டார மகளிர் மன்றம் சார்பாக சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாரியம்மன் திருக்கல்யாணம் சீர்வரிசை திரு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் காமாட்சிபுரி ஆதீனம் 51வது சக்தி பீடம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் தவத்திரு சாப்பிட்டா ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், குழந்தைவேல் மூலத்துறை சிவத்திரு சக்திவேல் மாரியம்மன் திருக்கோவில் திருமுறை அருள் செய் மணி ஞானசம்பந்தன் ஓதுவா மூர்த்திகள் தலைமையில் திருக்கல்யாண உபயம் கோத்தகிரி வட்டார மகளிர் மன்றம் சார்பாக நடைபெற்று அபிஷேக மலர் அலங்கார வழிபாடு அன்னதானம், இதனைத் தொடர்ந்து காமதேனு வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி திருவீதி உலா முக்கிய சாலை வழி சந்திப்புகளான கடைவீதி, காம்பாய் கடை, பேருந்து நிலையம், மார்க்கெட், காமராஜர் சதுக்கம் சென்று திருக்கோவில் வந்தடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் அருள் பெற்றனர்.
The post கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண விழா appeared first on Dinakaran.