அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியது காங்.: வாக்கு வங்கி வைரசை பரப்புவதாக குற்றச்சாட்டு

ஹிசார்: காங்கிரஸ் அதன் ஆட்சிக்காலத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியதாகவும், வாக்கு வங்கி வைரசை பரப்புவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு முதல் வணிக விமானத்தை பிரதமர் மோடி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்து, விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஹிசார்-அயோத்தி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசிலமைப்பை அழிக்கும் சக்தியாக காங்கிரஸ் மாறிவிட்டது. தனது அரசு ஆபத்தை எதிர்கொண்ட போதெல்லாம் அரசியலமைப்பை நசுக்கியது. அரசியலமைப்பின் சாராம்சம் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என்கிறது. ஆனால் காங்கிரஸ் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. உத்தரகாண்டில் பாஜ அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததை, அரசியலமைப்பின் நகரை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

அரசியலமைப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் அவர்களை ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. அம்பேத்கர் சமத்துவத்தை கொண்டு வர விரும்பினார். ஆனால் காங்கிரஸ் நாட்டில் வாக்கு வங்கி வைரசை பரப்பியது. ஒவ்வொரு ஏழையும் கண்ணியத்துடன் வாழ வேண்டும், தலை நிமிர்ந்து, கனவு காணவும் அவை நிறைவேறவும் அம்பேத்கர் விரும்பினார். ஆனால் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியது.

அரசியலமைப்பை அதிகாரத்தை பெறுவதற்கான ஆயுதமாக காங்கிரஸ் மாற்றியது. காங்கிரஸ் ஆட்சியில் அவர்களின் தலைவர்களின் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் சென்றதே தவிர, கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் சென்றடையவில்லை. அம்பேத்கர் உயிருடன் இருந்தபோது காங்கிரஸ் அவரை அவமதித்தது, 2 முறை தேர்தலில் தோற்கடித்தது. காங்கிரஸின் திருப்திப்படுத்தும் கொள்கையால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 2013ல் வக்பு சட்டத்தில் காங்கிரஸ் அவசரமாக திருத்தங்களைச் செய்து, அரசியலமைப்பை விட மேலானதாக இந்தச் சட்டத்தை உருவாக்கினர். இது அம்பேத்கருக்கு செய்த மிகப்பெரிய அவமானம். முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு உண்மையிலேயே அனுதாபம் இருந்தால், காங்கிரஸ் தலைவராக ஒரு முஸ்லிமை நியமிக்க வேண்டும். கட்சியில் அவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை தர வேண்டும். வக்பு திருத்த சட்டத்தால் மாபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

The post அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியது காங்.: வாக்கு வங்கி வைரசை பரப்புவதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: