கடலோர மாசுப்பாட்டை கண்காணிக்க புதிய டிரோன் உருவாக்கம்

சென்னை: கடலோர மாசுபாட்டை கண்காணிக்க கடல் நீர் தரவுகளைச் சேகரிப்பதற்காக தனி பயனாக்கப்பட்ட இரட்டை குவாட்கோப்டர் டிரோனை இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 85 கிலோ உடைய டிரோன் 25 கிலோ வரை சுமைகளை எடுத்துச் செல்லும். இதில் மேம்பட்ட கடலியல் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஒரு தொழில்துறை கூட்டாளருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டிரோன் நெல்லூர், பாமன்ஜியில் உள்ள என்ஐஓடியின் கடலோர வசதியில் கடல் மாதிரி சேகரிப்பை முடித்து, பின்னர் ஒரு கள செயல்திறன் சோதனையை மேற்கொண்டது. விரைவில், இதேபோன்ற டிரோன்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் 20 இடங்களில் கடல் தரவு சேகரிக்க இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து என்ஐஓடியின் கடல் மின்னணுவியல் குழுவின் மூத்த விஞ்ஞானி கூறியதாவது: இந்த டிரோன்கள் தயாராக வாங்கப்பட்டவை அல்ல. கடற்கரை நிலைமைகளுக்கு ஏற்ப, காற்று வீச்சு, நிலைத்தன்மை, பயண நேரம் மற்றும் சுமை தேவைகளை கருத்தில் கொண்டு இவற்றை நாங்கள் வடிவமைத்தோம்.

இந்த டிரோன்கள் கடற்கரையின் நிலப்பரப்பையும் வரைபடமாக்கும். இவற்றின் எடையில் பாதி உயர் திறன் கொண்ட பேட்டரி பேக் ஆகும். இது 30-45 நிமிட பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை கடலுக்குள் 2 கிமீ வரை பயணிக்க முடியும், அங்கு அவை தங்கி, வின்ச் முறையைப் பயன்படுத்தி சென்சார்களை நீரில் இறக்குகின்றன,” என தெரிவித்தார். இந்த டிரோன் உருவாக்கத்திற்கு என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அவர் கூறுகையில், சென்னையில் முட்டுக்காடு ஆறு மற்றும் பட்டினப்பாக்கத்தில் கடற்கரை நீர் தரவை நாங்கள் தொடர்ந்து சேகரித்து வருகிறோம்,” டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நிலப்பரப்பு, கடல்நீர் கலப்பு மண்டலங்கள் மற்றும் முக்கிய கடல்-நதி சந்திப்புகளில் சுற்றுச்சூழல் இயக்கவியலை திறம்பட கண்காணிக்க முடியும் என்றார். இந்த டிரோன், கொல்கத்தா, ஒடிசா, தமிழ்நாடு (சென்னை, முட்டுக்காடு, பட்டினப்பாக்கம்), கேரளா, கர்நாடகா, மும்பை, குஜராத் ஆகிய கடற்கரை பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கடலோர மாசுப்பாட்டை கண்காணிக்க புதிய டிரோன் உருவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: