திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: கோயிலில் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: பங்குனி மாத பவுர்ணமி தினமான இன்று திருவண்ணாமலையில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 6மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மலையை கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 3.21 மணிக்கு தொடங்கி, நாளை(13ம்தேதி) அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 12ம்தேதி இரவு(இன்று) கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கும் முன்பே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது. ராஜகோபுரத்தை கடந்து தேரடி வீதி வரை பக்தர்களின் வரிசை நீண்டிருந்தது.

பவுர்ணமி அதிகாலை 3.21 மணிக்கு தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். மதியத்திற்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பவுர்ணமியொட்டி இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பவுர்ணமி திதி வருவதால் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், வேலூர் கன்டோன்மென்ட் வழியாக சென்னை பீச் ஸ்டேஷன் வரையும், விழுப்புரம் வழியாக தாம்பரம் வரையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

The post திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி: லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: கோயிலில் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.

Related Stories: