திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகிதராகவும் தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர். புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல். திருவரங்கத்தின் கோயில் சாவி அவரிடம்தான் இருந்தது. அவர் ஸ்ரீ ராமானுஜரின் திருக்கோயில் சீர்திருத்தத்திற்கு துவக்கத்தில் தடையாக விளங்கினார். அவரைத் திருத்திப் பணிகொண்டு ராமானுஜரின் சீடராக்க முனைந்தார் கூரத்தாழ்வான். அதற்கான காலம் வந்தது. அமுதனாரின் தாயார் பரமபதித்தபோது, அவரது சரம கைங்கர்யங்களில் ஒரு பகுதியாகப் பதினோராம் நாள் செய்யப்படும் ஏகாஹத்தில் பங்கு கொள்ள ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைத் தேடினர். அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர் இறந்தவரின் பிரேதமாகக் கருதப்படுவார். ஓராண்டு காலம் அவர் கோயில் கைங்கர்யம் செய்ய முடியாது. ராமானுஜர் நியமனப்படி ஆழ்வான் அந்த ஏகாஹத்தில் அமர்ந்தார். அந்த ஸ்தானத்தில் அமர்பவர் “த்ருபதோஸ்மி’’ (திருப்தி அடைந்தேன்) என்று சொன்னாலே சிரார்த்தம் சம்பூர்ணமாகும். கூரத்தாழ்வான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை ராமானுஜரின் சீடராக்கினார். அதன் பிறகு அமுதனாரும் ராமானுஜரின் பெருமையை உணர்ந்து அவரிடம் தம்மையே ஒப்படைத்தார். அவர் ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார். அது மேலோட்டமாக பார்த்தால் ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச் செயலின் புகழையும், வைணவ தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஓதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுதனாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம். அதாவது இன்று. திருமால் ஆலயங்களிலும், வைணவர்கள் வீடுகளிலும் இந்த நட்சத்திர வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
12.4.2025 – சனிரங்கம் கோரதம்
பூலோக வைகுந்தம் என்று புகழப்படும் ஸ்ரீ ரங்கத்தில், அநேகமாக வருடத்தின் எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு உற்சவம் இருந்துகொண்டே இருக்கும். அதில் பங்குனி மாத உற்சவம், ஆதி பிரம்மோற்சவம் என்று சொல்லப்படுகிறது. இந்த உற்சவத்தில்தான் பங்குனி உத்திரம் வருகிறது. தாயார் பெருமாள் சேர்த்தி உற்சவம், ராமானுஜரின் கத்யத்ரய உற்சவம் என்று பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதில் பங்குனி உத்திர நாள் அன்று (11.4.2025) தங்கப் பல்லக்கில் பெருமாள் சித்திரை வீதியில் வலம் வந்து தாயார் சந்நதி வருவார். தாயார் சந்நதியில் “மட்டை அடி சேவை’’ எனப்படும். இதை பிரணய கலகம் என்பார்கள். பிறகு சேர்த்தி சேவை நடந்து அதிகாலை 4 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும். அதாவது சனிக் கிழமையான இன்று காலை வரை திருமஞ்சனம் முடிந்து, பெருமாள் ஆஸ்தானம் செல்லாமல், நேராக தாயார் சந்நதியில் இருந்து தேர் உற்சவத்துக்காக செல்வார். காலை 7 மணி அளவில் தேரில் பெருமாள் எழுந்தருள்வார். இந்த தேர் உற்சவத்திற்கு கோரதம் என்று பெயர் (தேர்கள் என்பது பொதுவாகத் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் திருக்கோயில்களில் வாகனம் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவை ரதம் அல்லது கோரதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிங்கல நிகண்டு இதனைப் பண்டில், சகடம், ஒழுகை, சகாடு என்றவாறு பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறது) காலை 8:00 மணிக்கு இந்த தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கும். பிறகு மாலையில் கோயிலுக்கு வந்து 9 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்வார். மறுபடி அதிகாலை ஒரு மணி வரை சித்திரை வீதிவலம் வருவார்.
14.4.2025 – திங்கள் தமிழ் வருடப்பிறப்பு
12 மாதங்களில் முதல் மாதமான சித்திரை பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறோம். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. வானியல் கணக்குப்படி, மேஷ ராசியில், அசுவனி விண்மீனின் முதல் பாகையில் நுழையும் தினம் இது. நாம் மட்டுமல்ல, கேரளா, மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையை புத்தாண்டாக ஏற்றுள்ளன. நேபாளம், பர்மா, கம்போடியா, லங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைத்துள்ளன.பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில்தான் வழக்கமாக வேங்கைமரம் பூக்கும். மலைபடு கடாம் ‘‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை’’ என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்’’ என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.சித்திரை மாதத்தின் முதல் நாளில், அனேகமாக, சைவ – வைணவ வேற்றுமை இல்லாது, எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லாக் கோயில்களிலும் அன்று “பஞ்சாங்க படனம்” என்று நடத்துவார்கள். அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு. பஞ்சாங்கம் என்பது அன்றைய திதி, நட்சத்திரம், நாள் (வாரம்), யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைப் படிப்பது. இதில் திதியைச் சொல்வதன் மூலமாக மகாலட்சுமியின் அருளும், நட்சத்திரத்தைச் சொல்வதன் மூலமாக பாவங்களிலிருந்து விடுதலையடையும், நாளைச் சொல்வதினால் ஆயுள் விருத்தியும், யோகத்தைச் சொல்வதினாலே நோயிலிருந்து விடுதலையடையும், கரணத்தைச் சொல்வதால் செய்கின்ற செயலில் வெற்றியும் கிடைக்கும். தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று, வீட்டில் விளக்கேற்றுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு மிகுந்த முக்கியத்துவம். சர்க்கரைப் பொங்கலோ பாயசமோ நைவேத்தியமாகப் படையலிட்டு வேண்டிக் கொள்ளுங்கள். அறுசுவை பச்சடி, வடை, பாயசம் வைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். இந்த மகிழ்ச்சி ஆண்டு முழுதும் நீடிக்க வேண்டும். இந்த நேர்மறை சிந்தனையோடு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட, குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். சகல செல்வங்களும் குடிகொள்ளும்.
14.4.2025 – திங்கள்திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிஷேகம்
மலைக்கோட்டை கோயிலானது பாறையின் மேல் 83 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பாறை உலகின் மிக பழமையான பாறைகளில் ஒன்றாக இருக்கிறது. மென்மையான இந்த பாறையானது முதன்முதலில் பல்லவர்களால் வெட்டப்பட்டது. பிறகு இக்கோயில், மதுரை நாயக்கர்களால் விஜயநகர ஆட்சியின் கீழ் முழுவதுமாக நிறைவு செய்யப்பட்டது. இந்த கோயிலானது மலை பாறையின்
உச்சியில் அமைந்துள்ளது. அதனால்தான் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் என்ற பெயர் பெற்றது. இந்தப் பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி விசேஷம். அதுபோலவே தமிழ்ப் புத்தாண்டு அன்று சிறப்பான பாலாபிஷேகம் செய்யப்படும். இதைக் காண்பவர்களுக்கு வருடம் முழுவதும் நற்பலன்கள் நடைபெறும் என்ற நம்பிக்கையோடு ஏராளமான அன்பர்கள் இன்று உச்சிப் பிள்ளையாரை தரிசிப்பார்கள்.
14.4.2025 – திங்கள் விஷு புண்ணிய காலம்
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள். சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய நீராடலுக்குரிய காலமாகும். சூரியன் முதல் ராசியாகிய மேஷ ராசியின் முதல் பாகையில் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து அஸ்வினி நட்சத்திரத்தில் நுழையும் நேரம், விஷு புண்ணிய காலம் என்று சொல்லப்படுகின்றது. மாதப் பிறப்பு நாளாகிய இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்வது மிக முக்கியம். இன்று தீர்த்தக்கரைகளில் புனித நீராடி வழிபாடு செய்வது சிறப்பு. வருடத்தின் 12 மாதங்கள் படைப்புத் தொழிலைச் செய்யும் நான்முகனுக்கும், காக்கும் தொழிலைச் செய்யும் மகாவிஷ்ணுவுக்கும், அளிக்கும் தொழிலைச் செய்யும் சிவனுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. விஷ்ணுபதி புண்ய காலம். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை.(ஷடசீதி புண்ணிய காலம்)
18.4.2025 – வெள்ளி வராக ஜெயந்தி
திருமால் இந்த உலகத்தைக் காப்பதற்காக எண்ணற்ற அவதாரங்களை எடுத்தார். அதில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டான். அதனால் இந்த உலகம் இருண்டது. உயிர்கள் கவலையடைந்தன. தேவர்கள் வருந்தினர். அவர்கள் இந்த உலகத்தை மீட்டெடுப்பதற்காக மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தபொழுது மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் காத்தார் என்பது புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘எயிற்றிடை மண்கொண்ட எந்தை’’, ‘‘ஏனத்துரு வாகிய ஈசன் எந்தை’’, ‘‘கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடக் கொண்ட எந்தாய்”, என்று ஆழ்வார்கள் பலராலும் கொண்டாடப்பட்ட அவதாரம் இது. வராகப் பெருமாளை வணங்குவோர் நீண்ட புகழ், நிலைத்த செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள். வராக அவதாரத்திற்கு எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாக சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய திருவிடந்தை கோயில் வராக அவ தாரத்தில் புகழ்பெற்ற கோயில். சிதம்பரத்துக்கு பக்கத்திலே ஸ்ரீ முஷ்ணத்தில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு பூவராகப்பெருமாள் என்று பெயர். வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது. மூலவர் ஸ்ரீ பூவராகப் பெருமாள் என்றும், தாயார் அம்புஜவல்லி என்னும் பெயர் பெற்றுள்ளனர். உற்சவரின் திருநாமம் ஸ்ரீ தேவி – பூதேவி சமேத யக்ஞவராகர் என்பதாகும். தலவிருட்சம் அரசமரம். தல தீர்த்தம் நித்ய புஷ்கரணி.
மேற்கு நோக்கிய ஆலயம். ஏழுநிலைக் கோபுரம். ஆலயத்திற்குள் நுழைந்ததும் கலை நயமிக்க தூண்களைக் கொண்ட புருஷசூக்த மண்டபம் உள்ளது. அதில் கருடாழ்வாரும், கருவறையின் முன்பாக காவல்புரியும் ஜெய, விஜயர்களும் துவாரபாலகர்களாக இருக்கிறார்கள். கருவறையில் பூவராகப் பெருமாள் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரு கரங்களுடன் இடுப்பில் கைவைத்த கோலத்தில், இரண்டு தேவியரோடு காட்சியருள்கிறார். இவரது தோற்றம் மேற்கு நோக்கியதாக இருந்தாலும், முகம் தெற்கு நோக்கி இருக்கிறது. இவரது திருமேனி சாளகிராமத்தால் ஆனது. ஆலயத்தின் பின்புறத்தில் நித்யபுஷ்கரணி தீர்த்தமும், தலவிருட்சமான அரசமரமும் இருக்கின்றன. நித்யபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி அரசமரத்தைச் சுற்றிவந்து பெருமாளையும் தாயாரையும் உள்ளம் உருக வழிபட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விஷ்ணுபிரியா
13.4.2025 – ஞாயிறு – சமயபுரம்மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.
16.4.2025 – புதன் – சங்கடஹர சதுர்த்தி.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.