பக்திப் பரவசம் தரும் பங்குனி உத்திரம்


* பௌர்ணமி ஏன்?

பௌர்ணமி நாளில் ஏன் உற்சவங்கள் என்கின்ற ஒரு கேள்வி எழும். சித்திரை பௌர்ணமி நாளில் சித்ரா பௌர்ணமியும், அடுத்து வைகாசி விசாகம் என வரிசையாக பௌர்ணமியை ஒட்டிய நாளின் உற்சவங்களும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. காரணம், பெரும்பாலான கோயில்களின் உற்சவங்கள் இரவில் நிலவு வெளிச்சத்தில் நடைபெறும் என்பதால் பௌர்ணமி நாளை உற்சவ நாட்களாக நம்முடைய முன்னோர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் அடிப் படையில்தான் பங்குனி உத்திர நாளும் அடுத்த வருகின்ற சித்ரா பௌர்ணமியும், ஆவணி அவிட்டமும், கார்த்திகை தீபமும், தைப்பூசமும் மாசி மகமும் கொண்டாடப்படுகிறது.

* எல்லா தெய்வங்களுக்கும் உரியது பங்குனி உத்திரம்

சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உகந்த திருநாளாக சில நாள் இருக்கும். சில உற்சவங்கள் குறிப்பிட்ட கோயில்களில் மட்டும் விசேஷ உற்சவங்களாக இருக்கும். ஆனால் பங்குனி உத்திரம், அநேகமாக எல்லா கோயில்களிலும் சிறப்பான திருநாளாக இருக்கும். முருகன் கோயில்களில் விசேஷமான வழிபாடும் அபிஷேகம் இருக்கும். சிவன் கோயில்களிலும் பங்குனி உத்திரம் விசேஷம். பல அம்மன் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். பல வைணவ கோயில்களிலும் (ஸ்ரீ ரங்கம் உட்பட) பங்குனி உத்திரம் விசேஷமான நாளாக கொண்டாடப்படும்.

* முருகன் ஞாபகம் வந்துவிடும்

பங்குனி உத்திரம் என்றாலே நமக்கு முருகன் ஞாபகம் வந்துவிடும் காரணம் அறுபடை வீடுகளில் ஆரம்பித்து சாதாரண கிராமங்களில் இருக்கக்கூடிய முருகன் கோயில்கள் உட்பட பங்குனி உத்திர திருநாள் பரவசமாய் கொண்டாடப்படும். நம்முடைய நாட்டில் மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கனடா நாடுகள் நம் கலாச்சாரத்தோடு தொடர்புடைய நாடுகள், என பல நாடுகளிலும் பங்குனி உத்திரம் விசேஷம். விசேஷம் என்றால் நம் நாட்டைப் போலவே அன்றைக்கு காவடி எடுத்தல், பால்குடம் சுமத்தல் என அத்தனை வைபவங்களோடு நடைப்பெறும்.

* தெய்வத் திருமண நாள்

பங்குனி மாதத்தை மங்கல மாதம் என்றே சொல்கின்றன சாஸ்திரங்கள். சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் அரங்கேறி இருக்கின்றன.
1. பங்குனி உத்திரத்தன்று தான் சிவன் – பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது.
2. தசரத மைந்தர்கள் ஸ்ரீ ராமன் – சீதை, லட்சுமணன் – ஊர்மிளா, பரதன் – மாண்டவி, சத்ருக்னன் – சுருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத் தன்றுதான் நடைபெற்றது.
3. முருகன் – தெய்வானைக்கும் திருமணம் நடைப்பெற்றது.
4. பெருமாள் – மகாலட்சுமி திருமணம் நடைபெற்றது.
5. ஆண்டாள் ரெங்கமன்னார் திருமணம் நடைப்பெற்றது.
6. மதுரையில் மீனாட்சி திருமணம்

* எப்படி எளிமையாக விரதம் இருப்பது?

நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இருக்கலாம். விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், பசி தாங்க முடியாதவர்கள் பால், பழம் அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடி சங்கல்பம் செய்துகொண்டு விரதத்தைத் தொடங்கிவிட வேண்டும். அன்று முழுதும் முருகன் நாமத்தை ஓதவேண்டும். பக்திப் பாமாலைகளை குழுவாகவோ தனியாகவோ பாடலாம். மாலையில் பெருமாள் முருகன், சிவன், கோயிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள் மற்றும் சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை பாருங்கள். ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் சிவபுராணம், ஸ்கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் தேவாரம்
போன்றவற்றைப் படிக்கலாம்.

* குலதெய்வ வழிபாடும் பங்குனி உத்திரமும்

குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும் பங்குனி உத்திரம் தினம் இருக்கிறது. இத்தினத்தில் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், குலம் சிறக்கும். மூதாதையரின் ஆசியும் கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் கருத்து ஒற்றுமையுடன் வாழ உதவும் விரதம் இது. திருமணமாகாதவர்களும் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்க இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். பங்குனி உத்திர நாளில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் சிறப்பானது. செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணத் தடங்கலைச் சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகனை மனமுருகி வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் சுபமாக முடியும் நம்மால் முடிந்த அளவுக்கு மஞ்சள், சரடு, குங்குமம், கண்ணாடி என மங்கலப் பொருட்களை பெண்களுக்கு வழங்குவதும் விசேஷ
பலன் களைக் கொடுக்கும்.

The post பக்திப் பரவசம் தரும் பங்குனி உத்திரம் appeared first on Dinakaran.

Related Stories: