நிலச்சரிவை தடுக்கும் வகையில் கேபியான் சுவர் அமைக்கும் பணிகள் கோத்தகிரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

* ஊட்டியில் இன்று ரூ.494.51 கோடியில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார், ரூ.102 கோடியில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

ஊட்டி, ஏப். 6: நீலகிரி மாவட்டத்துக்கு 2 நாள் கள ஆய்வுக்காக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கோத்தகிரியில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் கேபியான் சுவர் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஊட்டியில் இன்று நடக்கும் அரசு விழாவில் ரூ.494.51 கோடியில் முடிவடைந்த திட்டங்களையும், ரூ.464 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையையும் தொடங்கி வைத்து, ரூ.102 கோடியில் ரூ.15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். ஊட்டியில் இன்று நடக்கும் அரசு விழாவில், நீலகிரியில் ரூ.370.42 கோடி மதிப்பில் மருத்துவத் துறை கட்டிடங்களை திறந்து வைத்து, 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தார். கோவை விமான நிலைய வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் கார் மூலமாக கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்டார். வழி நெடுகிலும் முதல்வருக்கு கட்சியினரும், பொதுமக்களும் மலர் தூவியும், பொன்னாடை வழங்கியும் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். அங்கு மதிய உணவு அருந்தினார். பின்னர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். செல்லும் வழியில் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே நிலச்சரிவை தடுக்கும் வகையில் கேபியான் சுவர்அமைக்கும் பணி நடைபெற்று வருவதை கண்ட முதல்வர் காரில் இருந்து இறங்கி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் ரஜினிகாந்த், உதவி பொறியாளர் பூபாலன் உள்ளிட்டோர் முதல்வரிடம் மண் ஆணி அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து புகைப்படங்களுடன் விளக்கமாக எடுத்துரைத்தனர். ஆய்வின்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நீலகிரி எம்பி ஆ.ராசா, எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் முதல்வர் குஞ்சப்பனை வந்தார். அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோத்தகிரி பகுதிக்கு வந்த அவருக்கு மேள தாளங்கள் முழங்க, படுகர் இன மக்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கட்டப்பெட்டு பகுதியில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று வரவேற்பு அளித்தனர். பின்னர் ஊட்டிக்கு வந்தார். அவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில் ஊட்டி நகர திமுக மற்றும் ஊட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழகம் மாளிகை சென்றார். அங்கிருந்து மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். அங்கு சிறிது நேரம் அவருடன் உரையாடிய பின், ஊட்டியில் உள்ள ஜெம்பார்க் ஓட்டலுக்கு சென்றார். அங்கு நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நீர்வாகிகள் 52 பேருடன் ஆலோசனை நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கட்சி பணிகள் குறித்து அவர் நிர்வாகிகளிடம் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின், அங்கிருந்து தமிழகம் மாளிகை சென்றார்.

இன்று காலை 10 மணிக்கு ஊட்டி எச்பிஎப். பகுதியில் புதிதாக ரூ.464 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 11 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வருகிறார். அங்கு ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1703 திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். 15 ஆயிரத்து 634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.

* பழங்குடியின பெண்களுடன் செல்பி
நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பகுதி பழங்குடியின மக்கள் ஒன்று திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு குழந்தைகள், பெண்கள் அதிகளவில் தன்னைக்காண காத்திருந்ததை கண்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனது வாகனத்தில் இருந்து கீழிறங்கினார். பெண்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். அனைவரும் முதல்வருடன் செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.  கோத்தகிரிக்கு வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பள்ளி மாணவர்கள் பலரும் ரோஜா மலர்களையும், மலர் கொத்துக்களையும் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், கை குலுக்கி, சாக்லெட் கொடுத்து வாழ்த்தினார். இதனால், அங்கு கூடியிருந்த பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post நிலச்சரிவை தடுக்கும் வகையில் கேபியான் சுவர் அமைக்கும் பணிகள் கோத்தகிரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: