இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன் உருவான பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு

* தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே ரயில் சேவையையும் துவக்குகிறார், ரூ.8300 கோடியில் புதிய திட்டங்கள் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

ராமேஸ்வரம்: ரூ.545 கோடியில் அமைக்கப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.  ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் நூற்றாண்டு கடந்த பழைய பாலத்திற்கு அருகே ரூ.545 கோடி மதிப்பிலான புதிய ரயில் பால கட்டுமான பணிகளை, கடந்த 2019, மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் கடந்தாண்டு 2024 இறுதியில் நிறைவடைந்தது. இந்த புதிய ரயில் பாலம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரமும் கொண்டது. பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது.

333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு இரும்பு கர்டர்களை கொண்டது. இந்தியாவில் முதன்முதலாக செங்குத்து தூக்குப்பாலத்துடன் அமைக்கப்பட்ட கடல் ரயில் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 3 மாதங்களாக இப்பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள், ஆய்வுகள் நடத்தி திறப்பு விழாவிற்கு தயார் செய்தனர். வரலாற்று சிறப்புமிக்க இப்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை 10.40 மணிக்கு இலங்கை அனுராதபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.

அங்கிருந்து இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலை 11.45 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்திற்கு வந்திறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாம்பன் சாலை பாலத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறப்பு விழா மேடைக்கு வரும் பிரதமருக்கு, சாஸ்திரிகள் கும்ப மரியாதை கொடுத்து வரவேற்கின்றனர். தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பச்சை நிற கொடியசைத்து தாம்பரம் – ராமேஸ்வரம் புதிய ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.

பின்னர் பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து செங்குத்து தூக்குப்பாலத்தை திறந்து வைத்து, இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பலில் வீரர்கள் இந்திய தேசியக்கொடியை அசைத்தபடி செல்லும் நிகழ்வை பார்வையிடுகிறார். பின்னர் பகல் 12.45 மணி முதல் 1.15 மணி வரை ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது.

தொடர்ந்து மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கும் நலத்திட்ட விழாவில், கலந்து கொண்டு ரூ.8,300 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து உரையாற்றுகிறார். கூட்டம் முடிந்ததும், பிற்பகல் 3 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 3.50 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறார்.

அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். பிரதமர் பாதுகாப்பு பணிக்காக தமிழக போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சிஐடி, புலனாய்வு பிரிவு, மரைன் போலீஸ், ரயில்வே போலீசார் என 4 ஆயிரம் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய,மாநில போலீசார், உளவுத்துறை, புலனாய்வு பிரிவு என மொத்தம் 6 ஆயிரம் பேர் பிரதமர் வருகை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* கலாமின் கனவு ரயில்
பிரதமர் மோடி துவக்கி வைக்கும் தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில் சேவைக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. ராமேஸ்வரம் தீவு மக்களின் நலனுக்காகவும், சுற்றுலாப்பயணிகள் சிரமமின்றி செல்ல முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பழைய ரயில் பாலம் நூற்றாண்டு விழாவில் சென்னைக்கு புதிய ரயில் சேவை வேண்டுமென கோரிக்கை வைத்தார். இன்று அவரின் கோரிக்கை நிறைவேறுகிறது.

தாம்பரம்-ராமேஸ்வரம் தினசரி விரைவு ரயில், தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இதில் ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 5 ஏசி மூன்று அடுக்கு பெட்டி, 6 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிக்கு 1 பெட்டி இருக்கும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

* பிரதமர் துவக்கி வைக்கும் திட்டங்கள் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கும் திட்டங்கள் வருமாறு:
* பாம்பன் புதிய ரயில் பாலம், தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில் சேவை.
* தேசிய நெடுஞ்சாலை எண் 40ல் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பிரிவில் 28 கிமீ நீளப்பாதையை, நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
* தேசிய நெடுஞ்சாலை எண் 332ல் விழுப்புரம் – புதுச்சேரி பிரிவில் 29 கிமீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை திட்டம்.
* தேசிய நெடுஞ்சாலை 32ல் 57 கிமீ நீளமுள்ள பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36ல் சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் 48 கிமீ நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

* ஆவலுடன் காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாளை (இன்று), ஏப்ரல் 6ம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்’ என்று கூறி உள்ளார்.

* ராமேஸ்வரத்திற்கு 28க்கு மேற்பட்ட ரயில்கள் இயக்கம்
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தென் மாவட்டங்களில் பிரபல சுற்றுலா தலங்களான ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு, வட மாநிலங்களில் இருந்து வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தென்மாவட்டத்திற்கு வரும் ரயில்களில் மதுரை மற்றும் காரைக்குடி வழியாக திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் இன்று முதல் தாம்பரம்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் புதிய சேவை உட்பட 28க்கும் மேற்பட்ட ரயில்கள் ராமேஸ்வரம் வரை இயக்கப்பட உள்ளன. இதேபோல் அடுத்தடுத்து சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது’’, என்றார்.

* ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை
பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து, ராமேஸ்வரம் கோயிலில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிளம்பிச் சென்றதும் பிற்பகல் 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 3 நாட்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. அவசர சேவை ஆம்புலன்ஸ் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களும் குறிபிட்ட 4 மணி நேரத்தில் அனுமதிக்கப்படாது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 850 நாட்களுக்கு பின் மீண்டும் சேவை
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் பழைய ரயில் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணிகளுடன் ரயில்களை இயக்க கடந்த 2022ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பாம்பன் கடலில் புதியதாக இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கட்டப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில் சேவையும் இன்று முதல் துவங்குகிறது. இதன்மூலம் சுமார் 850 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரத்திற்கு ரயில்வே தொடங்குகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்

The post இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன் உருவான பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: