பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை, அதே ஊரில் கொத்தனார் வேலை பார்த்த வேலூர் மாவட்டம் வன்னிபுதூர் கிராமத்தை சேர்ந்த பிரபு (23) என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார்.
பின்னர் கடந்த 2015 ஆகஸ்டு 10ம் தேதி, சகோதரியின் திருமணத்திற்கு தனது ஊருக்கு வரும்படி பெரம்பலூர் அழைத்துள்ளார். பின்னர் அவரது டூ வீலரிலே வேலூருக்கு கடத்தி சென்று அங்கிருந்து தட்டாம்பட்டியிலும், நாவிதம்பட்டியிலும் உள்ள உறவினர் வீடுகளில் தங்க வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வி.களத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தவழக்கின் விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார்.
நேற்று வந்த இந்த வழக்கில் இறுதி விசாரணையில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 வருடங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
The post 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொத்தனாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.