திருப்பூர், ஏப். 3: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு கிழக்கு பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் வீதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த மாதம் சாலை சீரமைத்து கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
பூமிபூஜை நடைபெற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆனநிலையில் தற்போது வரை கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவில்லை. அப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று 4ம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து கான்கிரீட் தளம் அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 4வது மண்டல அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.