ஆந்திராவில் வினோத திருவிழா: வறட்டிகளால் தாக்கிக்கொண்ட கிராம மக்கள்

 

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், கைருப்பா கிராமத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் காளிதேவி-வீரபத்திர சுவாமி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது வீரபத்திர சுவாமி, திடீரென தனது வாக்குறுதியை மீறியதாக கூறி அவர் மீது காளிதேவிக்கு கோபம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து அப்போதைய இருதரப்பை சேர்ந்த மக்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் பசுஞ்சாண வறட்டிகளால் தாக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து இவர்களின் சண்டையை ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து காளிதேவி, வீரபத்திரசுவாமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். வறட்டியால் தாக்கிக்கொண்டதால்தான் இந்த திருமணம் வெற்றிகரமாக நடந்ததாக கிராம மக்கள் நம்பினர். இந்த நிகழ்வு தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதி பண்டிகை மறுநாள் நடந்துள்ளது.

இந்தப் புராண கதையின்படி, ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதிக்கு மறுநாள் பாரம்பரிய முறைப்படி வறட்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. அப்போது வறட்டிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த விழாவில் ஏராளமான மக்கள் திரண்டனர். அங்குள்ள காளி கோயிலில் வழிபட்ட பிறகு, கிராம மக்கள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் வறட்டியால் தாக்கிக்கொள்ளும் வினோத திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த வினோத திருவிழாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்தால் காயத்திற்கு வீரபத்திர சுவாமி விபூதி பூசினால் குணமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த விநோத திருவிழாவில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஆந்திராவில் வினோத திருவிழா: வறட்டிகளால் தாக்கிக்கொண்ட கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: