மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்: மருமகன் சிக்கினார்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மாமியாரால்தான் மனைவி தன்னுடன் வாழ மறுக்கிறார் எனக்கருதிய தொழிலாளி, மாமியார் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி பேனர் தயார் செய்து அதை உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் பரவ செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வினோதினி(30). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். வெங்கடேசன் வங்கியில் லோன் வாங்கி கறவை மாடு வாங்கினாராம்.

அதற்கான தவணை பணத்தை கட்டவில்லையாம். இதனை வினோதினி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த வினோதினி, குழந்தைகளை அழைத்துகொண்டு தாய் வீடான குனிச்சி இலக்கிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார். தாய் வீட்டில் இருந்தபடியே வங்கி லோன் கட்டுவதற்காக வினோதினி அங்குள்ள கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். மாமியார் மாதுதான் மனைவியை தனது வீட்டிற்கு அனுப்பி வைக்க மறுக்கிறார் என நினைத்து வெங்கடேசன் ஆத்திரம் அடைந்தார்.

இதனால் மாமியார் மாது, உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக ‘ஆழ்ந்த இரங்கல்’ என்ற பேனரில் அவரது படத்தை வைத்து தயார் செய்துள்ளார். இதை மனைவி வினோதினியின் உறவினர்களின் வாட்ஸ்அப் எண்கள், பேஸ்புக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வினோதினிக்கு போன் செய்து கேட்டுள்ளனர். இதையடுத்து வினோதினி, தனது கணவரால் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆபத்து’ எனக்கூறி கந்திலி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்: மருமகன் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: