அன்பைப் போற்றும் அறப்பணிகளை முன்னெடுப்போம்: தமிமுன் அன்சாரி ரமலான் வாழ்த்து

சென்னை: “வெறுப்பை விதைக்கும் தீய சக்திகளை புறந்தள்ளி; அன்பை போற்றும் அறப்பணிகளை முன்னெடுப்போம். ரமலான் பண்டிகை எனப்படும் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்பம் பொங்கும் வாழ்த்துக்கள்” என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகை குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இஸ்லாத்தின் எழில்மிகு கொள்கைகளில் ஒன்று புனித ரமலான் நோன்பு.

தீயவற்றிலிருந்து தற்காத்துக் கொண்டு; நல்ல செயல்களில் கவனம் செலுத்தி; மனதை பக்குவப்படுத்தும் பயிற்சிகளை ரமலான் தருகிறது.

இம்மாதம் முழுவதும் முஸ்லிம்களின் இல்லங்கள் ஆன்மீகத்தால் மணக்கின்றன.

அனைத்து வித ருசிகர உணவுகள் அருகில் இருந்தும் அதை அவர்கள் தீண்டுவதில்லை.

யாருமற்ற தனிமையில் கூட, ஒரு சொட்டு தண்ணீரை அருந்துவதில்லை.

ரமலான் மாதம் முழுவதும் சூரியன் எழுவதற்கு முன் தொடங்கி, அது அடிவானில் மறையும் வரை; இறையருளை பெறுவதற்காக; விவரிக்க முடியாத ஆன்மீகப் பொறுப்புடன் அவர்களின் அன்றாட வாழ்வு நகர்கிறது.

இம்மாதத்தின் இறுதியில், அந்தி சாயும் பொன் மாலைப் பொழுதில்; நீல வானில் வெண் சிரிப்புடன் தோன்றும் தலைப்பிறையை பார்த்ததும்; உள்ளங்கள் உற்சாகமடைகின்றன.

அப்போதே ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.

தன் செல்வங்களிலிருந்தும்; சேமிப்பிலிருந்தும்; ஏழை எளியோருக்கு அம்மாதம் முழுதும் வாரி வழங்கி பேரானந்தம் அடைந்தவர்கள்; இத்திருநாளில் தங்களை புத்தாக்க சிந்தனைகளோடு திருவிழா மகிழ்ச்சிக்கு தயார் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்திய திருநாட்டில் வாழும் முஸ்லிம்கள், தங்கள் உற்றார் உறவினர்களோடு மட்டுமின்றி, சகோதர சமூகங்களோடும் அன்பை பரிமாறி இத்திருநாளை கொண்டாடுகிறார்கள்.

நம் தாய் மண்ணில், தமிழர் மனை எங்கும் ரமலான் வாழ்த்துக்களை கேட்க முடிகிறது.

‘எங்கள் முஸ்லிம் உறவு எங்கே? என கேட்டு, ஓடி வந்து கட்டித் தழுவி வாழ்த்து கூறும் சகோதர சமூக மக்களுடன் ரமலான் மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இப்பண்டிகை வெளிப்படுத்தும் பல சிறப்புகளில் இதுவும் ஒன்று.

இத்தகைய ஒற்றுமை கலாச்சாரத்தை கட்டி காத்திட இத்திருநாளில் உறுதி ஏற்போம்.

வெறுப்பை விதைக்கும் தீய சக்திகளை புறந்தள்ளி; அன்பை போற்றும் அறப்பணிகளை முன்னெடுப்போம்.

ரமலான் பண்டிகை எனப்படும் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்பம் பொங்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post அன்பைப் போற்றும் அறப்பணிகளை முன்னெடுப்போம்: தமிமுன் அன்சாரி ரமலான் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: