ராஜஸ்தானில் ஆண் குழந்தை வேண்டும் என்று மனைவியிடன் தகராறு: 2 பெண் குழந்தைகளை தரையில் வீசி கொன்ற வாலிபர்

ஜெய்ப்பூர்: ஆண் குழந்தை வேண்டும் என்று மனைவியுடன் தகராறு செய்த வாலிபர் தனக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை தரையில் வீசி கொன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம்,சிகார் மாவட்டம் நீம் கா தானா என்ற இடத்தை சேர்ந்தவர் அசோக்குமார் யாதவ்(30). இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஆண்டு அனிதாவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தன்னுடைய குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்பதாக மனைவியை அவர் துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அசோக்குமாருக்கும் அனிதாவுக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமுற்ற அசோக்குமார் அனிதாவை அடித்துள்ளார்.

பின்னர் பச்சிளம் குழந்தைகளை தரையில் போட்டுள்ளார்.இதில் 2 குழந்தைகளும் உயிரிழந்தன. இதன் பின்னர் வீட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்தில் சடலங்களை புதைத்து விட்டு வந்துள்ளார். இது பற்றி அசோக்குமாின் மைத்துனர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.

இது பற்றி ஏஎஸ்பி ரோஷன் மீனா,‘‘ குழந்தைகளை கீழே போட்டதை அடுத்து படுகாயங்களுடன் இருந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அசோக்குமாரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து குழந்தைகளை புதைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அசோக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

The post ராஜஸ்தானில் ஆண் குழந்தை வேண்டும் என்று மனைவியிடன் தகராறு: 2 பெண் குழந்தைகளை தரையில் வீசி கொன்ற வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: