நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரம் மியான்மரில் பலி 1644 ஆக அதிகரிப்பு: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவிக்கரம்

பாங்காக்: சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. 3,400 பேர் காயமடைந்த நிலையில், 139 பேரை காணவில்லை. அங்கு கட்டிட இடிபாடுகளில் இருந்து குவியல் குவியலாக சடலங்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மருக்கு நிவாரண பொருட்களை அனுப்பி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. மியான்மரின் சர்காயிங் நகரை மையம் கொண்டு நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, 6.4 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் மியான்மர், தாய்லாந்து நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல குடியிருப்பு கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் நேற்று துரிதப்படுத்தப்பட்டன. இதில், மியான்மரில் 1644 பேர் பலியானதாகவும், 3,400 பேர் காயமடைந்ததாகவும், 139 பேரை காணவில்லை என்றும் ராணுவம் தலைமையிலான அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் பலியாகி உள்ளனர். நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக மாண்டலே இல்லை என்றாலும் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நகரில் பல கட்டிடங்கள் சரிந்தன. சாலைகளில் பெரிய விரிசலுடன் பள்ளங்கள் ஏற்பட்டு, பாலங்கள் தரைமட்டமாகின. அணை ஒன்றும் உடைந்துள்ளது. தலைநகர் நேபிடாவிலும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக அரசு அலுவலர்கள் குடியிருப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் பல பகுதிகளில் மின்சாரம், தொலைபேசி, இணைய சேவைகள் முடங்கி உள்ளன.

ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளது. ராணுவ ஆட்சி மட்டுமின்றி மியான்மரில் நீண்ட காலமாக அரசு படைகளுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போரும் நீடிக்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக்குழு செல்வதில் சிக்கல் நிலவுகிறது. இது மேலும் பலி எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மர் போன்ற அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் கூடிய புவிப்பகுதியில், எளிதில் பாதிக்கும் கட்டிடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடத்தில், 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது பேரழிவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே மியான்மரில் உண்மையான பாதிப்புகள் அரசு தகவல்களைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்டை நாடான இந்தியா ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் உடனடியாக உதவிக்கரம் நீட்டி உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 80 வீரர்கள் கொண்ட குழு மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்காலிக முகாம்கள், போர்வைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பான், சோலார் விளக்குகள், ஜெனரேட்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட 15 டன் நிவாரணப் பொருட்கள் விமானப் படையின் 2 விமானங்களில் யங்கூன் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மியான்மரில் உள்ள இந்தியர்களுக்கு உதவ அவசரகால உதவி எண்களும் செயல்பட்டு வருகின்றன. இதே போல, சீனா, ரஷ்யா, தென் கொரியா, அமெரிக்கா, ஈரான், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளும் ஐநாவின் உலக சுகாதார நிறுவனமும் மியான்மருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. சீனா முதல்கட்டமாக 37 பேர் கொண்ட மீட்புக்குழுவை யங்கூனுக்கு அனுப்பியது. ரூ.120 கோடி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இதே போல் ரஷ்யாவும் 2 விமானங்களில் 120 மீட்புப் படை வீரர்களை அனுப்பி உள்ளது.

* மியான்மருக்கு செல்லும் இரண்டு கடற்படை கப்பல்கள்
ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மனிதாபிமான உதவிகள் விமானப்படை விமானம் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலமாகவும் அனுப்பப்படுகிறது. இதற்காக 2 கடற்படை கப்பல்களில் நிவாரணப் பொருட்களும், மனிதாபிமான உதவி பணியாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், 118 பேர் கொண்ட மருத்துவமனை குழுவினர் ஆக்ராவில் இருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்’’ என்றார்.

* ராணுவ ஜெனரலுடன் பிரதமர் மோடி பேச்சு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைவரும், ராணுவ ஜெனரலுமான மின் ஆங் ஹிலாங்கிடம் தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும்’’ என கூறியுள்ளார்.

* தாய்லாந்தில் 6 பேர் பலி
தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் சத்துசாக் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பிரமாண்ட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 26 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். 47 பேரை காணவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டிட தொழிலாளர்கள். இடிபாடுகளை நகர்த்த பெரிய அளவிலான உபகரணங்கள் நேற்று கொண்டு வரப்பட்டன. ஆனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பு பெரும் சிரமம் என அதிகாரிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். இதுதவிர வடக்கில் சியாங்க் மாய் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் சேதமடைந்தாலும் யாரும் பலியாகவில்லை. உயரடுக்கு கட்டிடங்கள் பலவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவற்றின் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை தாய்லாந்து அரசு முடுக்கிவிட்டுள்ளது.

* பலி 10,000 ஆக உயரக்கூடும்?
இந்திய புவித்தட்டு மற்றும் பர்மா புவித்தட்டுகள் இணையும் பகுதியில் மியான்மர் நாடு அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் நிகழ்வது வழக்கம். இந்த சூழலில் நூற்றாண்டின் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்தித்திருக்கும் மியான்மரில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் பேராவது பலியாக வாய்ப்பிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.

The post நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரம் மியான்மரில் பலி 1644 ஆக அதிகரிப்பு: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவிக்கரம் appeared first on Dinakaran.

Related Stories: