திருவண்ணாமலை மாவட்டத்தில் 30,017 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர் கலெக்டர் தர்ப்பகராஜ் நேரடி ஆய்வு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

திருவண்ணாமலை, மார்ச் 29: திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. அதையொட்டி, தேர்வு மையத்தை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று தொடங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு 147 மையங்களில் நடந்தது. காலை 10 மணி முதல் 10.10 மணிவரை வினாத்தாளை படித்துப் பார்க்கவும், 10.10 மணி முதல் 10.15 மணிவரை தேர்வு எழுதும் மாணவரின் விபரங்களை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 10.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், மொத்தமுள்ள 499 உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 15,810 மாணவர்கள், 14,854 மாணவிகள் உள்பட ெமாத்தம் 30,664 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில், 30,017 பேர் நேற்று தேர்வு எழுதினர். 628 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களை கண்காணிக்க, 151 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 152 துறை அலுவலர்கள் உள்பட 3742 பேர் தேர்வு பணியில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை கேட்டு எழுதுவதற்காக 535 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, 173 பேர் கொண்ட பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார். தேர்வு முறையாக நடைபெறுகிறதா, தேர்வு மையத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 30,017 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர் கலெக்டர் தர்ப்பகராஜ் நேரடி ஆய்வு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: