‘அவங்கள மாதிரி இருக்கணும்’ இந்தியாவை உதாரணமாக காட்டி தேர்தலில் மாற்றம் செய்த டிரம்ப்: அமெரிக்காவில் பரபரப்பு

நியூயார்க்: இந்தியாவை உதாரணமாக காட்டி, தேர்தலில் கள்ள ஓட்டுக்களை தடுக்க அதிபர் டிரம்ப் அதிரடி மாற்றங்களை செய்திருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது அமெரிக்க தேர்தல் நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செய்யும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன்படி, இனி தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொரு அமெரிக்கர்களும் தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை காட்ட வேண்டும். அனைத்து மாகாணங்களும், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான தரவுகளை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதி ரத்து செய்யப்படும். தலைநகர் வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் நாளுக்கு பிறகு வரும் தபால் ஓட்டுகள் இனி ஏற்றுக் கொள்ளப்படாது.

இவ்வாறு புதிய மாற்றங்களை அறிவித்த அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் மிகச்சிறந்த உதாரணங்களாக உள்ளன. அங்கு, வாக்காளர் பட்டியலை பயோமெட்ரிக் தரவுத் தளத்துடன் (ஆதார்) இணைக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் குடியுரிமையை நிரூபிக்க வாக்காளர்களிடம் அவர்களின் சுயசான்று மட்டுமே பெறப்படுகிறது. அமெரிக்காவில் சுதந்திரமான, நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும். எந்த மோசடிகளும், தவறுகளும் நடக்கக் கூடாது. மோசடிகள் இல்லாத முறையான தேர்தல் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனின் உரிமை’’ என்றார். முன்னதாக 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்ற போது, தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

The post ‘அவங்கள மாதிரி இருக்கணும்’ இந்தியாவை உதாரணமாக காட்டி தேர்தலில் மாற்றம் செய்த டிரம்ப்: அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: