50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இரானி கொள்ளையன் சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: மேலும் 2 கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை

சென்னை: நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல மகாராஷ்டிரா கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியை சென்னையில் நேற்று போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். வழிப்பறி செய்த நகைகளை மீட்க தரமணி ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதால், தற்காப்புக்காக திருப்பி சுட்டதில் ஜாபர் குலாம் உசேன் இரானி உயிரிழந்தான். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இந்திரா(54) என்பவரிடம் பைக் ஆசாமிகள் 2 பேர் வழிமறித்து ஒன்றரை சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் சரியாக 6.30 மணிக்கு சாஸ்திரி நகர் காமாட்சி மருத்துவமனை அருகே அம்புஜம்மாள்(66) என்பவரிடம் 3 கிராம் செயின் பறிக்கப்பட்டது. அடுத்து சில நிமிடங்களில் 6.45 மணிக்கு திருவான்மியூர் இந்திரா நகரில் லட்சுமி(54) என்பவரிடம் 8 சவரன் செயின், காலை 7 மணிக்கு கிண்டி எம்ஆர்சி நகரில் நிர்மலா(60) என்பவரிடம் 10 சவரன் செயின், வேளச்சேரி டான்சி நகரில் காலை 7.10 மணிக்கு விஜயா(72) என்பவரிடம் 2 சவரன் செயின் மற்றும் வேளச்சேரி விஜயா நகர் பகுதியில் முருகாம்மாள்(55) என்பவரிடம் 3 சவரன் செயின் என காலை 6 மணி முதல் 7.10 மணிக்குள் 6 பெண்களிடம் மொத்தம் 26 சவரன் தங்க நகைகளை பைக் ஆசாமிகள் 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் அளித்த தகவலின் படி, உடனே போலீஸ் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, அடையார் துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார் ஆகியோரிடம், செயின் பறிப்பு கொள்ளையர்களை கைது செய்ய உத்தரவிட்டார். விசாரணையில், செயின் பறிப்பில் வடமாநில கும்பல் ஈடுபட்டது உறுதியானது.

உடனே தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர். இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ேநரடி பார்வையில் 130 போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். விமானநிலையத்தில், கடைசி நேரத்தில் டிக்கெட் எடுப்பவர்கள் குறித்தும் விசாரித்தனர். அப்போது அவசரமாக கடைசி நேரத்தில் ஐதராபாத்திற்கு செல்லும் விமானத்திற்கு இரண்டு நபர்கள் டிக்கெட் கேட்டதாகவும, அதில் ஒரு நபர் டிக்கெட் வாங்கி சென்றதும், மற்றொரு நபர் அடையாள அட்டை சரியாக இல்லாத காரணத்தினால் டிக்கெட் வழங்கவில்லை என்றும் தெரியவந்தது. அந்த தகவலின் படி ஐதராபாத் புறப்பட தயாராக இருந்த விமானத்தை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி விமான கட்டுப்பாட்டு அறைக்கு உரிய முறையில் தகவல் அளிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. உடனே விமான நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டி சம்பந்தப்பட்ட விமானத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்து, விமானத்தில் இருந்து இறக்கி அழைத்து வந்தார். மற்றொரு ஆள் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்வதற்கு தயாராக இருந்த போது, சென்னை விமான நிலையத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டான்.

2 பேரிடம் நடத்திய விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி(26), மிசாம் மஜாதுஷ்மேசம் இரானி(28), என தெரியவந்தது. மற்றொரு குற்றவாளியான சல்மான் உசேன் இரானி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வது தெரியவந்தது. உடனடியாக மத்திய ரயில்வே பாதுகாப்பு படைக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டு ஆந்திரா மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தில் வைத்து மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். ஓங்கோலில் கைது செய்யப்பட்ட சல்மான் உசேன் இரானியை நேற்று பிற்பகல் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாபர் குலாம் உசேன் இரானி தான் செயின் பறிப்பு சம்பவத்திற்கு தலைமை ஏற்று நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதனால் குற்றச்சம்பவத்தில் அபகரிக்கப்பட்ட நகைகள் மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றை மீட்க முக்கிய குற்றவாளி ஜாபர் குலாம் உசேனை, திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் ஒரு எஸ்ஐ உட்பட 3 பேர் காவல் வாகனத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பைக் மறைத்து வைத்திருந்த தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்து வந்தனர்.

அப்போது மறைத்து வைக்கப்பட்ட பைக்கை ஜாபர் குலாம் உசேன் இரானி அடையாளம் காட்டினான். இன்ஸ்பெக்டர் அந்த வாகனத்தை வெளியே எடுத்து வா என்று கூறியதும், ஜாபர் குலாம் உசேன் இரானி பைக் அருகே சென்று ஏற்கனவே பைக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக 2 ரவுண்டு சுட்டபடி தப்பி ஓடினான். இதில் நல்வாய்ப்பாக போலீசார் மீது குண்டு பாயவில்லை. அப்போது தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் முகமது புகாரி திருப்பி சுட்டத்தில் குற்றவாளி ஜாபர் குலாம் உசேன் இரானி மார்பில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தான். உடனே போலீசார் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதைதொடர்ந்து, போலீசார் சம்பவம் குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பிறகு உயிரிழந்த ஜாபர் குலாம் உசேன் இரானி உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்திற்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி நேற்று காலை இணை கமிஷனர் சிபி சக்கரவாத்தி நேரில் வந்து 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்தார். என்கவுண்டர் நடந்த இடத்தில் தடயவில் துறை நிபுணர்கள், வருவாய் துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்து சில தடயங்களை சோதனைக்கு எடுத்து சென்றனர். அதேநேரம் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்கவுன்டர் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது: ெசன்னையில் தொடர் செயின் பறிப்பில் இரானி கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் சைதாப்பேட்டையில் ஆரம்பித்து 6 செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது என்னுடைய கவனத்திற்கு நுண்ணறிவு பிரிவில் இருந்து வந்த உடனே, அலர்ட் செய்து சென்னை முழுவதும் சோதனை நடத்த சொன்னேன். இதில் சம்பந்தப்பட்டவர்கள், வெளிமாநில ெகாள்ளையர்களாக இருக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று விமான நிலையம், ரயில் நிலையங்களில் சோதனை நடத்த சொன்ேனன்.

சென்னை விமான நிலையத்தில் 2 பேரை பிடித்தோம். அவர்கள் கொடுத்த தகவலின் படி, மற்றொரு குற்றவாளியை ஓங்கோலில் ஆர்பிஎப் உதவியுடன் பிடித்தோம். பிடிபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள் என்று சொல்லக்கூடிய மும்பை கேங்க்கை சேர்ந்தவர்கள். பைக்கை பறிமுதல் செய்ய, நமது போலீசார் ஜாபர் குலாம் உசேன் இரானியை அழைத்து சென்ற போது, அவன் பைக்கில் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் போலீசை நோக்கி சுட்டான். தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதில் அவன் உயிரிழந்தான். திட்டமிட்டு சுடப்படவில்லை. தற்காப்புக்காக நடந்தது. ஜாபர் குலாம் உசேன் இரானி மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கொள்ளையர்கள் வழிப்பறி செய்த பிறகு அவர்கள் உடைகளை மட்டும் தான் மாற்றினார்கள். ஷூவை மாற்றவில்லை. இதனால் அவர்களின் ஷூ அடையாளத்தை வைத்து பிடித்தோம். இரானிய கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது இது முதல் முறை. இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்ட குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.

The post 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இரானி கொள்ளையன் சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: மேலும் 2 கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: