ராம நவமியான ஏப்ரல் 6ம் தேதி புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை ராம நவமியான ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கடந்த 1914 ம் ஆண்டு இந்தியாவின் முதல் கடல் வழி ரயில்வே பாலம் திறக்கப்பட்டது. 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் கடல் அரிப்பு காரணமாக பாலத்தின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு அதன் உறுதி தன்மை குறைந்து காணப்பட்டது. மேலும் கப்பல் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தூக்கு பாலத்திலும் அவ்வப்போது பழுது ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து பாம்பன் பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசிடம் அனுமதி பெற்று ரூ. 550 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது. 2.1 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வந்த இந்த ரயில் பாலம் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 5ம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகை தர உள்ளதாகவும் ராமநவமியான ஏப்ரல் 6ம் தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post ராம நவமியான ஏப்ரல் 6ம் தேதி புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.

Related Stories: