×

சென்னையில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி வரும் 26ம் தேதி தொடக்கம்


சென்னை: சென்னையில் பிரமாண்ட அறிவியல் கண்காட்சி வரும் 26ம் தேதி தொடங்குகிறது. தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அங்கமான அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்ச்சிகளில் மிகமுக்கியமான ஒன்று சென்னை அறிவியல் விழாவாகும். சென்னை அறிவியல் விழா 2008 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் ஆதரவுடன் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவினை வெற்றிகரமாக நடத்துவதற்காக முக்கிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திரா காந்தி அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ இயக்குநரகம், புற்றுநோய் நிறுவனம் போன்ற அறிவியலில் தலை சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வருகை புரிந்து சமுதாயத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் காட்சி பொருட்களை வைத்து அவர்கள் பயனடையும் வண்ணம் ஏற்பாடுசெய்யப்படும்.

சென்னை அறிவியல் விழாவில் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி அரங்குகள் மற்றும், அறிவியல் செய்முறை விளக்கங்கள், மற்றும் அறிவியல் கருத்துகளை மக்களிடையே எடுத்துச் செல்ல நாட்டுபுற கலைகளான பொம்மலாட்டம், தெரு கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் ஆகியன இடம் பெறுகின்றன.  இவ்விழா மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய (பிர்லா கோளரங்கம்) வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி வரும் 26ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Brammanta Science Fair ,Chennai ,science fair ,Science ,City ,Higher Education Department of the Government of Tamil Nadu ,Giant Science Fair ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...