இறைமக்களே, இது வேடிக்கையான கதையாக இருப்பினும் நிதரிசமான உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. உலகில் பெரும்பாலான வதந்தி இப்படிதான் பரவுகிறது. ஊர் வாயை யாராலும் அடைக்க முடியாது. ஆனால் சில பல தருணங்களில் நம்முடைய வாயை அடைக்கலாமே. சமீபகாலங்களில் சமூக ஊடகங்களில் பரவிவரும் அனைத்து செய்திகளையும் நம்புவதும், அதை பலருக்கு பகிர்ந்து பரபரப்பாக்குவதும் வேதனையளிக்கிறது. ஒரு செய்தி அல்லது ஒரு தகவல் உங்களுக்கு கிடைத்தால் அதை நீங்கள் நம்பும் முன்பு அல்லது பிறருக்கு அதை பகிரும் முன்பு உங்களுக்கு கிடைத்த தகவலை யார் அனுப்பியது? எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? எந்த தேதியில் வந்தது? அதனுடைய உண்மைத்தன்மை என்ன? நேரில் கண்ட சாட்சிகள் உண்டா? உள்ளிட்ட புலன்விசாரணை கேள்விகள் அனைத்தும் மிக மிக முக்கியமானவைகளாகும்.
‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளனர் பெரியவர்கள். இதைத்தான் பரிசுத்த வேதாகமும் ‘‘நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும் மனம் பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக’’ (பிரசங்கி 5:2) என்றும் ‘‘ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்’’ (1 கொரி. 2:15) என்றும் தெளிவுற எடுத்துரைக்கிறது.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.
The post தீர விசாரிப்பதே மெய்! appeared first on Dinakaran.