ஏக்நாத் குறித்து ஆபாச கருத்து வீடியோ வெளியீடு; காமெடி நடிகரின் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்: மும்பையில் பரபரப்பு

மும்பை: துணை முதல்வர் ஏக்நாத் குறித்து ஆபாச கருத்து வீடியோ வெளியிட்ட காமெடி நடிகரின் ஸ்டுடியோவை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் மும்பையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, அவ்வப்போது தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் அரசியல் தொடர்பான கேலி, கிண்டல் வீடியோக்களை வெளியிட்டு வருவார். பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுடன் நேர்காணல்களை நடத்தி, அதனை வீடியோவாகவும் வெளியிட்டு வந்தார். அந்த வகையில் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பற்றி ஆபாசமான கருத்துக்களுடன் கூடிய சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா (ஏக்நாத்) கட்சியை சேர்ந்த தொண்டர்கள், மும்பையின் கார் காவல் நிலையத்தில் குணால் கம்ரா மீது புகார் அளித்தனர். இதற்கிடையே குணால் கம்ராவின் ஸ்டுடியோவிற்குள் புகுந்த சிவசேனா தொண்டர்கள், அங்கிருந்த நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவசேனா தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தற்போது அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பு மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே கூறுகையில், ‘குணால் கம்ராவின் சர்ச்சைக்குரிய வீடியோவை பார்த்து எங்களது கட்சித் தொண்டர்கள் வருத்தமடைந்தனர். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், சிலர் அவரது ஸ்டுடியோவிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். குணால் கம்ராவின் பதிவு கண்டனத்துக்குரியது. அவரது பதிவு சிவசேனா தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

பலவீனமான பட்நாவிஸ்
சிவசேனா எம்எல்ஏ முர்ஜி படேல் கூறுகையில், ‘குணால் கம்ரா மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவரை எங்கு பார்த்தாலும் அவரது முகத்தில் கறுப்பு மையை எங்களது தொண்டர்கள் பூசுவார்கள்’ என்றார். இதற்கிடையில், சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘குணால் கம்ரா ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். மகாராஷ்டிரா அரசியல் குறித்து அவர் நையாண்டிப் பாடல் வீடியோவை வெளியிட்டதால் ஏக்நாத் ​​ஷிண்டே கும்பல் எரிச்சலடைந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் குணால் கம்ராவின் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கியுள்ளனர். தேவேந்திர பட்நாவிஸ் (முதல்வர்), நீங்கள் ஒரு பலவீனமான உள்துறை அமைச்சர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஏக்நாத் குறித்து ஆபாச கருத்து வீடியோ வெளியீடு; காமெடி நடிகரின் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்: மும்பையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: