மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுஷா, கடந்த 2021ம் ஆண்டு முதல் சென்னையில் ஒரு தனியார் செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அங்கே வேலை பார்த்து வந்த சீர்காழி தாலுகா கொண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளமாறன் என்பவரை காதலித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக லிவிங் டு கெதர் என்ற பாணியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மஞ்சுஷாவை, இளமாறன் அங்குள்ள அம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். ஏழு மாதங்களாக ஈரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் ஊருக்கு திரும்பி உள்ளனர். வீட்டில் திருமணம் செய்ததை மறைத்து அவரவர் வீட்டிற்கு இரண்டு பேரும் சென்ற நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இளமாறனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
சீர்காழியில் இளமாறனை சந்தித்த மஞ்சுஷா தன்னை திருமணம் செய்தது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டிருந்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளமாறன் மஞ்சுஷாவை தாக்கியதில் அவர் மயக்க நிலைமைக்கு சென்றுள்ளார்.
இதனால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விட்டு இளமாறன் வெளியேறி விட்டார். மயக்கம் தெளிந்த மஞ்சுஷா தொலைபேசியில் தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் இளமாறனின் வீட்டில் பேசியபோது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் மீண்டும் மஞ்சுஷாவுடன் சேர்ந்து வாழ்வது குறித்து அவர் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்த நிலையில் மஞ்சுஷாவின் வீட்டில் சீர்காழி காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் அளித்து பத்து நாட்கள் ஆன நிலையில் சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இளமாறன் முயற்சி செய்து வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் மஞ்சுஷா மற்றும் அவரது பெற்றோர் உறவினர்கள் மாவட்ட எஸ்பி ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். தன்னை தனது கணவருடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என அப்போது அவர் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.
The post லிவிங் டூ கெதரால் வந்த வினை வெளிநாடு செல்ல இருக்கும் வாலிபர் மீது எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.