அயோத்தியாப்பட்டணம், மார்ச் 24: சேலம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(60). டிரைவரான இவர் விருதாச்சலத்தில் இருந்து, சேலம் அடுத்த அயோத்தியாப்பட்டணத்திற்கு மினி டிப்பர் லாரியில் வைகோல் லோடு ஏற்றிச்சென்றார். சர்க்கார் நாட்டாமங்கலம் அருகே, நேற்று மாலை 5.50 மணிக்கு சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது, வைக்கோல் லோடு உரசியதில் தீப்பற்றிக் கொண்டது. மினி டிப்பர் லாரி ஹைட்ராலிக் வாகனம் என்பதால், டிரைவர் மாதேஸ்வரன் லாரியை சாலையோரம் நிறுத்தியதுடன், பின்புறம் வைக்கோல் லோடை கீழ் தள்ளினார். இருப்பினும் லாரியின் பின்பகுதியில் சிறிது தீ பற்றி சேதமடைந்தது. ஆனால், கீழே தள்ளப்பட்ட வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாழப்பாடி தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து லாரி மற்றும் தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகளில் இருந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் லாரியில் தீ appeared first on Dinakaran.