இடைப்பாடி, மார்ச் 24: இடைப்பாடி அருகே, பிரசவத்தின் போது இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக நர்சுகள் மீது புகார் தெரிவித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுப்பள்ளியை சேர்ந்தவர் பிரபு(35). லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(24). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 18ம்தேதி நள்ளிரவு, பிரசவத்திற்காக வெள்ளாளபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரபுவுடன் பைக்கில் வந்துள்ளார்.
அப்போது, தற்காலிக நர்சு இலக்கியா பணியில் இருந்தார். அருகில் குடியிருப்பில் இருந்த நர்சு திவ்யாவை கூப்பிட்டுள்ளார். திவ்யா வந்தவுடன் கர்ப்பணியான இந்திராவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு நர்சு திவ்யா, இந்திராவை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், இந்திராவின் மலக்குடலில் ஓட்டை விழுந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து, நேற்று வெள்ளாளபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த பிரபுவின் தாய் சித்ரா மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொங்கணாபுரம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முறைப்படி போலீசில் புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பிரபு, கொங்கணாபுரம் போலீசில் நர்சுகள் திவ்யா மற்றும் இலக்கியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக நர்சுகள் மீது புகார் appeared first on Dinakaran.