சத்தியமங்கலம்,மார்ச்24: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வற்றியது. இதனால் வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வனத்துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பவானிசாகர் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக பவானிசாகர் வனச்சரக அலுவலர் அலுவலர் சதாம் உசேன் தெரிவித்தார்.
The post வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.