வரத்து அதிகரிப்பு எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் சரிவு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து காய்கறிகளின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 650 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அனைத்து காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று 800 வாகனங்களில் இருந்து 9000 டன் காய்கறிகள் வந்து குவிந்தன.

இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென சரிந்தது. ஒரு கிலோ வெங்காயம், உருளை கிழங்கு, நூக்கல், காலிபிளவர், சுரைக்காய், புடலங்காய், கத்தரிக்காய் ரூ.15க்கும், தக்காளி, சவ்சவ் ரூ.8க்கும் பீட்ரூட் ரூ.10க்கும், முள்ளங்கி ரூ.12க்கும், முட்டைக்கோஸ் ரூ.5க்கும் பாவைக்காய், அவரைக்காய், குடைமிளகாய், கொத்தவரங்காய் ரூ.20க்கும், வெள்ளரிக்காய், பச்சைமிளகாய், கோவைக்காய் ரூ.18க்கும், பீர்க்கங்காய், முருங்கைக்காய் ரூ.30க்கும், காராமணி ரூ.25க்கும் சேமகிழங்கு ரூ.40க்கும், இஞ்சி ரூ.40க்கும், பட்டாணி ரூ.50க்கும், பூண்டு ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் காய்கறிகள் வரத்து அதிகரித்து அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மாதம் முழுவதும் இந்நிலை நீடிக்கும். அடுத்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் அனைத்து காய்கறிகளின் விலையும் உயரும்’’ என தெரிவித்தார்.

The post வரத்து அதிகரிப்பு எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: