தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக இருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து

புதுடெல்லி: பிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியான கபில் சிபில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி, ஒருங்கிணைந்த கொள்கை, கருத்தியல் கட்டமைப்பு, எதிர்காலத்திற்கான செயல்திட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் பொது களத்தில் கூட்டாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருக்கக் கூடாது. நான் மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பேசவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்தியா கூட்டணியால் திறம்பட செயல்பட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்பு மசோதா நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் விரைவில் பீகார் தேர்தல் நடக்க உள்ளது. எனவே இந்த சமயத்தில் வக்பு மசோதாவை தாக்கல் செய்தால், அது பீகாரில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படும் என்பது குறித்து ஆளுங்கட்சி கவலைப்படலாம். ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதை எதிர்த்து சவால் செய்யும் வாய்ப்புகளும் உள்ளன.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நாட்டின் அரசியலில் மிகவும் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும். அதனால்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை கூட்டினார். ஆனால் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறாது. முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

The post தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக இருக்க வேண்டும்: கபில் சிபல் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: