வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நாடு தழுவிய போராட்டம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கியூ.ஆர். இலியாஸ் கூறுகையில்,‘‘ வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வரும் 26ம் தேதி பாட்னாவிலும் 29ம் தேதி விஜயவாடாவிலும் போராட்டங்கள் நடைபெறும். இதில், கலந்து கொள்ள ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி,காங்கிரஸ், எல்ஜேபி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. அதே போல் ஆந்திராவில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திர கட்சிகளான தெலுங்குதேசம்,ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் ‘‘வக்பு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதற்காக தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிகள் எந்த காரணமும் இல்லாமல் மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் விரிவான உட்பிரிவு விவாதங்கள் நடத்தப்படாமல் 428 பக்க அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் மீதான மிக சமீபத்திய தாக்குதலே வக்பு மசோதா’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நாடு தழுவிய போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: