டெல்லி ஐகோர்ட் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த பணத்தின் வீடியோ ரிலீஸ்: 25 பக்க அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: ஐகோர்ட் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் எரிந்த பணத்தின் வீடியோ மற்றும் 25 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை நீதிமன்ற வரலாற்றில் அதிரடியாக பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஹோலி பண்டிகையின் போது (மார்ச் 14) டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. விபத்து குறித்து வர்மா குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடித்தனர்.

எவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. முன்னதாக இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயாவிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேட்டிருந்தார். நீதிபதி வர்மாவுக்கு எதிராக உள் விசாரணைத் தொடங்கப்பட்ட பின்பு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கே இடமாற்றம் ெசய்து பரிந்துரைத்தது. மேலும் இடமாற்ற பரிந்துரையும், விசாரணையும் இரண்டு தனித்தனி விவகாரங்கள் என்றும், இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்றும் கொலீஜியம் விளக்கம் அளித்திருந்தது.

இதனிடையே நீதிபதி வர்மா நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. தொடர் விடுப்பில் உள்ளார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சிஐஜே) சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உள் விசாரணையைத் தொடங்கிய நீதிபதி உபாத்யாய், பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் தான் சேகரித்த தகவல்கள் ஆதாரங்களை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் கடந்த 20ம் தேதி நடந்த உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்துக்கு முன்பாகவே விசாரணையைத் தொடங்கியிருந்தார். தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதி உபாத்யாயின் அறிக்கையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான முடிவினை எடுக்கும்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் உத்தரவின் பேரில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டின் உள்ளே கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் சிக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் வீட்டிற்குள் எரிந்த ரூபாய் நோட்டுகளின் கட்டுகள் தெரிகின்றன. இந்த வீடியோவை டெல்லி போலீசார் எடுக்கின்றனர். மேலும் தீயணைப்பு துறையினர் எரிந்த ரூபாய் கட்டுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் பிற ஆவணங்களும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு தற்போதைக்கு எவ்வித நீதித்துறைப் பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கேட்டு கொண்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சமர்ப்பித்த அறிக்கை, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் மற்றும் பிற ஆவணங்கள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 25 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், வழக்கு தொடர்பான ஆவணங்களும், நீதிபதி வர்மாவின் பதிலும் பகிரங்கப்படுத்தப்பட்டது. இருப்பினும், நீதிபதி யஷ்வந்த் வர்மா, மேற்கண்ட விசயங்கள் தனக்குத் தெரியாது என்று மறுத்துள்ளார். மேலும் அதில், ‘எனது வீட்டின் அறையில் இருந்த பணக் கட்டுகளை நானோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களோ வைத்திருக்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறேன்.

யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய அறையில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் விபத்து நடந்த அறையானது, என்னுடைய பாதுகாப்புப் பணியாளர்கள் பயன்படுத்தும் அறையாகும். எரிந்த ரூபாய் நோட்டுகளை எனது மகளிடமோ, ஊழியரிடமோ காட்டவில்லை. மேலும், வீட்டிற்குள் கட்டுக்கட்டாக இருந்த பணம் எங்களுக்குச் சொந்தமானது என்ற குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பணம் எங்களால் வைக்கப்பட்டது அல்லது சேமிக்கப்பட்டது என்ற கருத்து அல்லது பரிந்துரையை எதிர்கிறேன். என்னைக் குற்றம் சாட்டி ஊடகங்களில் அவதூறு பரப்புவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட ஊடகங்கள் இதுகுறித்து விசாரணை செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால், மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக உள் கமிட்டி விசாரணை முடியும் வரை, நீதிபதி வர்மா எவ்வித நீதித்துறை பணிகளையும் செய்ய முடியாது. நீதித்துறையின் வெளிப்படத்தன்மையை பொதுமக்கள் அறியும் வகையில், மேற்கண்ட அறிக்கை விபரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பகிரங்கப்படுத்தி உள்ளார். இதுபோன்ற முடிவுகள், உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக நடந்துள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதித்துறை மீதான நம்பிக்கை கேள்விக்குறி;
உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாதைச் சேர்ந்தவரான நீதிபதி யஷ்வந்த் வர்மா, சட்டப் படிப்புக்குப் பின் அலாகாபாத் உயர் நீதிமன்ற வழக்குரைஞராக 1992ல் பதிவு செய்தார். அலகாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2014ல் நியமிக்கப்பட்ட இவர், கடந்த 2016ல் நிரந்தர நீதிபதியானார். பிறகு 2021ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளான இவர், அரசமைப்பு நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். அதனால் அவரை நாடாளுமன்றத் தீர்மானம் மூலமே பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட பதிவில், ‘டெல்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுவது தீவிரமான விவகாரம்; இது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

The post டெல்லி ஐகோர்ட் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த பணத்தின் வீடியோ ரிலீஸ்: 25 பக்க அறிக்கையில் திடுக்கிடும் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: