அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 18 நாட்களில் 1,01,679 அட்மிஷன்

சென்னை: அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில் இதுவரையில் 1,01,679 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 58 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 கோடியே 20 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குதல் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் காரணமாக தற்போது அதிக அளவு பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மார்ச் மாதம் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1ம் தேதி தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் பேரில் சென்னையில் மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மார்ச் முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 49 ஆயிரத்து 931 மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று வரையிலான கணக்கின்படி தமிழ்வழி பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்பில் இதுவரை 72 ஆயிரத்து 646 மாணவர்களும், ஆங்கில வழி பாடத் திட்டத்தில் 19 ஆயிரத்து 53 மாணவர்களும், எல்.கே.ஜி., யு.கே.ஜி., 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 9 ஆயிரத்து 980 என மொத்தம் 1,01,679 மாணவ, மாணவியர் அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

The post அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 18 நாட்களில் 1,01,679 அட்மிஷன் appeared first on Dinakaran.

Related Stories: